
திமுக அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று கூடியது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவின் இறுதியாக விஜய் தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையுடனும், வலியுடனும் இத்தனை நாட்களாக நாம் இருந்தோம். அந்தச் சூழலில் அவர்களுடன் சேர்ந்து அமைதி காத்து வந்தோம்.
அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் பின்னப் பட்டன, பரப்பப்பட்டன. இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைக் கொண்டு நாம் துடைத்தெறியத்தான் போகிறோம்.
அதற்கு முன்பாக தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஓர் உரைக்கு ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அரசியல் செய்ய விருப்பவில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடிச் சொல்லும் முதல்வர், பெருந்தன்மையை பெயரளவில் மட்டுமே பேசும் முதல்வர், 15.10.2025 அன்று தமிழக சட்டப்பேரவையில் நமக்கு எதிராகப் பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தைக் கக்கியுள்ளார் என்பதையும் எப்படிப்பட் ஒரு அரசியலைச் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?
No comments: