சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்காக சிறப்பாக அமைக்கப்பட்ட கலை மற்றும் கலாச்சார போட்டி சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌஸாத்தின் நெறிப்படுத்தலில் இன்று (22) எழிலுடன் நடைபெற்றது. புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வு, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்லாமல், சமூகத்தில் அவர்களின் திறன்களை வெளிக்கொணரும் அரிய மேடையாகவும் அமைந்தது.
அமைச்சின் கலாச்சார மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். அமைச்சின் அதிகாரிகள், கல்வி மற்றும் சமூகப் பணியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். கலை, இசை, நடனம் உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் விசேட தேவையுடைய மாணவர்கள் தங்கள் இயற்கைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அமைச்சினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இத்தகைய செயல்திட்டங்கள், அவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருவதோடு, சமுதாயத்தில் சம உரிமை உணர்வை வளர்க்கவும் பெரிதும் உதவுகின்றன என அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். நிகழ்வு வருகையாளர் பாராட்டுகளுடனும், போட்டியாளர்களின் மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் அஸ்வான் எஸ் மௌலானா, பிரதி செயலாளர் நூருல் ஹுதா உமர், நடுவர்கள், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய வளவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
No comments: