இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் பாடசாலையின் அதிபர் ஏ.சி. ஹாமித் தலைமையில் (05) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் கலந்து கொண்டார். இங்கு உரையாற்றிய அவர், கல்முனை கல்வி வலயத்தில் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டு மிளிர்கின்ற நிந்தவூர் கல்வி கோட்டத்தில் உள்ள முதன்மையான பாடசாலையாகும்.
இதன் பலனாக இன்று இப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாகாண மற்றும் வலய மட்டங்களிலும் பல்வேறு சாதனைகளை தொடர்ச்சியாக நிலைநாட்டி வருகின்றனர். அண்மையில் இந்திய நாட்டினுடைய இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இந்த பாடசாலைக்கு வருகை தந்தமை மற்றும் அவருக்கு இந்த பாடசாலையின் உடைய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு, குறித்த உயர்ஸ்தானிகரை மிகவும் அகமகிழ செய்த ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது.
இன்று இந்த நிகழ்வில் பல சிறப்பான அம்சங்கள் நிகழ்ந்தேறியது. அதில் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் யாதெனில் இங்கு பாராட்டும் பெற்ற மாணவர்களுக்கு தரம் ஒன்று தொடக்கம் 5 வரை கற்பித்த அனைத்து ஆசிரியர்களையும் மறக்காமல் அவர்கள் அழைக்கப்பட்டு, பெற்றோர்களால் அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டது இந்த பாடசாலையின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும்.
இந்த பாடசாலை கல்முனை வலயத்தில் முதல் தரமான பாடசாலைகளில் ஒன்றாகும். பெண்களின் தலைமைத்துவத்திற்கு வித்திடுகின்ற பாடசாலைகளில் முதன்மையான பாடசாலை இதுவாகும்.
இன்று நிந்தவூர் பிரதேசத்தில் கல்வியின் மீதான அக்கறையானது மிகவும் அபரிதமாக வளர்ச்சி கண்டு வருவது அண்மைக்காலமாக புலப்படுகின்றது.
நிந்தவூர் பிரதேசம் ஒரு வரப்பிரசாதம் மிக்க பிரதேசமாகும் ஏனெனில் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர் இந்த பாடசாலைக்கு வருகை தந்திருந்தார். மிக அண்மையில் இந்த இந்நாட்டின் பிரதமரும் கல்வி உயர் கல்வி அமைச்சருமான பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த ஊருக்கு விஜயம் செய்திருந்தமையும் பாராட்டத்தக்க விடயமாகும்.
அண்மையில் இந்தப் பாடசாலையினால் நடத்தப்பட்ட கண்காட்சி மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இப்பிராந்தியத்தை அரசியல் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகளையும் அழைத்து இந்த மாணவர்களுடைய ஆக்கங்களை ஒரு கண்காட்சியின் ஊடாக எங்களுக்கும் முழு உலகுக்கும் கொண்டுவர நேர்ந்தமையும் இந்த பாடசாலை ஆகும். இதன் மூலம் இப்பாடசாலை இந்த வலயத்துக்கும் மாகாணத்திற்கும் தேசியத்திற்கும் ஆற்றிய அரும் பணி போற்றத்தக்கதாகும் என வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வலயக் கல்வி பணிமனையின் நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபிர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம்.முத்தரீஸ், பாடசாலை, பிரதி உதவி அதிபர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் ஹைக்கல் உட்பட வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றுகின்ற ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
No comments: