News Just In

10/19/2025 02:32:00 PM

அரசின் புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்.- பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா

அரசின் புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்.- பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா


நூருல் ஹுதா உமர்

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 28 மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது அரச முஸ்லிம் கலவன் பாடசாலையில் “Emerging Talents – Grade 5 Scholarship Achievers’ Day – 2025” என்ற தொனிப்பொருளில் 2025.10.18 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் , பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் குழுவினரின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான ஏ. ஆதம்பாவா அவர்கள் உரையாற்றிய போது, நாட்டின் கல்வி மேம்பாட்டுடன் பொருளாதார வளர்ச்சி, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி குறித்து முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், “புதிய கல்விச் சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் அடித்தளமாக அமையும். கல்வி மூலமாகவே ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும். அரசாங்கம் மாபியாக்கள் இல்லாத, சமநீதி நிலவும், கல்வி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது.” என்றார்.

“2025ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தின் முன்னேற்றத்திற்கு சாய்ந்தமருது அரச முஸ்லிம் கலவன் பாடசாலை முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தப் பாடசாலை வலயத்தில் 15 வது இடத்தைப் பிடித்திருப்பதுடன், சித்தி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டால் 12வது இடத்தில் உள்ளது.” என்றும் மாணவர்களின் தன்னம்பிக்கை, ஆர்வம் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு ஆகியவை பாடசாலையின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன என்றும், பெற்றோர் வழங்கிய நன்கொடைகளால் பாடசாலைக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, “2026ஆம் ஆண்டு முதல் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தம் அமுலுக்கு வரும் என்றும். இது பரீட்சை மையக் கல்வியில் இருந்து செயல்முறை அடிப்படையிலான கல்வியாக மாறும். மாணவர்களின் சிந்தனை திறனை, ஆக்கப்பூர்வ தன்மையை, புத்துணர்வை வளர்க்கும் கல்வி அமைப்பு அமுல்படுத்தப்படும்.” என்றும் அதன்படி, வகுப்பறை மதிப்பீடுகள் (Continuous Assessment) மற்றும் GPI முறை மதிப்பெண் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், மொழி மற்றும் வாசிப்பு திறனை வளர்க்க தொடர்ச்சியான வாசிப்பு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் போது, “இலங்கை மீது தற்போது சர்வதேச நம்பிக்கை மீண்டும் உருவாகி உள்ளது. கடந்த ஆண்டில் நாட்டுக்கு வந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்தது. 2029ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து அரசாங்கம் செயல்படுகிறது.” என்றும் “உலக வங்கியின் நிதியுதவியுடன் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும். சாய்ந்தமருதுக்கென தனியான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எங்களது பிராந்தியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென நம்புகிறேன்.” என்றும் தெரிவித்தார்.


அதன்படி கரைவாகுப்பற்றில் இரும்புப் பாலம், பழைய வைத்தியசாலை வீதி பாலம், கடற்கரை பாலம் உள்ளிட்ட கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும், நீர் விநியோக மற்றும் கரைவாகு வட்டை தரிசு நிலங்களை நிரப்பி குடியிருப்புக்களை அமர்த்தும் பணிகளும் சேர்த்தே செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“Emerging Talents – Grade 5 Scholarship Achievers’ Day – 2025” இன் சிறப்பு விருந்தினர்களாக கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சுலைஹா பீவி ஆகியோர் கௌரவ அதிதிகளாக கல்முனை கல்வி வலய பிரதி பணிப்பாளர்களான நிர்வாகப் பிரிவு எம்.எச்.எம். ஜாபிர், அபிவிருத்தி பிரிவு எம்.எச். றியாஷா, திட்டமிடல் பிரிவு என். வரணியா, முகாமைத்துவ பிரிவு யூ.எல். றியால், சாய்ந்தமருது கோட்ட கல்விப்பணிப்பாளர் அஸ்மா ஏ. மாலிக், ஆரம்பக் கல்வி மற்றும் EPSI ஒருங்கிணைப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கீர், ஆரம்பக் கல்வி ஆசிரியர் எஸ்.எம்.எம். அன்சார் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பொறியாளர் மற்றும் SDEC செயலாளர் பொறியியலாளர். எம்.ஐ.எம். றியாஸ், அத்துடன் ஷாபாஷ் & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் கட்டடக் கலை மற்றும் அளவையியல் வல்லுநருமான எம்.சி.எம். ஹஷீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சாஹுத்துல் நஜீம் உரையாற்றியபோது;

கடந்த காலத்தில் இப்பாடசாலையின் கல்வி நிலைமையை நினைவுகூர்ந்து, 2012–2013 ஆண்டுகளில் மிகக் குறைந்த மாணவர்கள் மட்டுமே புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றனர் என்றார். ஆனால் இன்று 28 மாணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளுடன் சாதனை படைத்திருப்பது அதிபரும் ஆசிரியர் குழுவினரும் செய்த உழைப்பின் விளைவாகும் என அவர் குறிப்பிட்டார்.

“தரம் ஐந்து மாணவர்களின் வெற்றி என்பது, தரம் ஒன்று முதல் நான்கு வரை உள்ள ஆசிரியர்களின் அடித்தளப் பணியின் விளைவு. அதனால் அனைத்து நிலை ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்,” எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலை மூடப்படும் அபாயம் இருந்தது. ஆனால் அதிபர் இல்லியாஸின் தொண்டாற்றலாலும், ஆசிரியர் குழுவின் தியாகத்தாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் இப்பாடசாலை இன்று மாவட்டத்தின் முன்னணி பாடசாலையாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது என பாராட்டினார்.

“ஒரு பாடசாலை மூடப்படும் நிலையில் இருந்து ஒரு முன்னோடியான பாடசாலையாக மாற முடிந்தால், மற்ற பாடசாலைகளும் அதையே இலக்காகக் கொள்ளலாம். கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வொரு அதிபரும் முயற்சிக்க வேண்டும்,” என்று அவர் அதிபர்களை ஊக்குவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் கல்விச் சேவைகளையும், ஆசிரியர் நியமனப் போராட்டங்களில் காட்டிய தலைமைத்துவத்தையும் நினைவுகூர்ந்து பாராட்டினார். “அவருடைய ஆற்றலும் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பும் எங்கள் பிரதேசத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகும்,” என நஜீம் அவர்கள் வலியுறுத்தினார்.

மாணவர்களை நோக்கி உரையாற்றிய அவர், “இந்த வெற்றி உங்கள் பெற்றோர்களின் உழைப்பின் பலன். இந்த பாடசாலைதான் உங்கள் திறமையின் அடித்தளம் என்பதை மறக்க வேண்டாம்,” என அறிவுறுத்தினார். மேலும், ஆங்கிலம், கலை, இலக்கியம் மற்றும் பிற துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதை அவர் பாராட்டினார்.

அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் நிகழ்வில் உரையாற்றியபோது, கடந்த ஐந்து ஆண்டுகள் இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் 2026ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்விக்காக புதிய பாடசாலையை நோக்கிச் செல்கின்ற நிலையில், அவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டி கௌரவிப்பது பள்ளியின் மரபாகும் எனக் குறிப்பிட்டார்.

“புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப் பெற்று தகுதி பெற்ற மாணவர்கள் பெருமையுடன் நிற்கிறார்கள். அதேவேளை வெட்டுப்புள்ளிக்கு நெருக்கமாக இருந்தும் சிறந்த முயற்சியை வெளிப்படுத்திய மாணவர்களும் நமது பெருமையாகும். இந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்திறன்களைக் கொண்டவர்கள்; முயற்சி செய்தால் நிச்சயமாக உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.” என்று தெரிவித்தார்.

மாணவர்கள் பெற்ற புள்ளி வெற்றியின் முடிவல்ல, அது கல்வி பயணத்தின் தொடக்கம் மட்டுமே எனும் உண்மையை உணர வேண்டும் என்றும், புலமைப்பரிசு வென்றவராக இருந்தாலும் அல்லது சற்று குறைவாக இருந்தாலும் அனைவரும் உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் தமது உரையில், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா போன்றோர் கல்வி துறையில் இருந்து சமூக முன்னேற்றத்தில் தலைசிறந்த சாதனையாளர்களாக உயர்ந்ததை எடுத்துக்காட்டி, மாணவர்கள் அவர்களைப் போல சமூகத்திற்கு பயனுள்ள நபர்களாக வளர வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.

நிகழ்வுக்கு பெற்றோரிடமிருந்து எந்தவித நிதியும் அறவிடாமல், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஏற்பாடு செய்ததை பெருமையாக குறிப்பிட்டார். பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் மனமுவந்த பங்களிப்பின் மூலம் இந்நிகழ்வு சிறப்புற நடைபெற்றது என அவர் நன்றியைத் தெரிவித்தார்.

இம்முறை 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் பலர் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் A.R. அஹனிப் (170) உயர்ந்த புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றார். அடுத்து M.H. சிம்தா ஹைசாத் (159) மற்றும் A.M.F. அம்னத் நாதா (159) இரண்டாம் இடத்தைப் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து Z.U. முகம்மது கைஸ் (152), N. முகம்மது நபீஸ் (152), M.R.M. ஷெசாத் யுஸ்ரி (147), H.A. ஆபி அகமது (146), M.R.F.T. கான்சா (146), R.A. ஃபதீஹ் (146) ஆகியோர் சிறந்த சாதனையினை பதிவு செய்தனர்.

மேலும் M.I.I. அதாஹ்பா மனாரி (145), A.H. மாஹா மர்யம் (144), M.H.M. முஃப்தி (143), M.N. நாபித் அகமது (143), M.J. பாத்திமா (140), N. நிஷாத் ஷல்ஹான் (140), M.J. பாத்திமா அயானா (140) ஆகியோரும் பாராட்டத்தக்க மதிப்பெண்களைப் பெற்றனர்.

அதேபோல் M.R.F. ஹசீபா பர்ஹத் (139), M.A. பாத்திமா அலீனா (139), Z. ஜாஹ்ருல் அகமது (139), M.S. பாத்திமா ருக்கைய்யா (138), M.S. மன்ஷாப் அகமது (136), A.M. அத்லி (136), M.F. முகம்மது அஸ்மல் (135), J. ஹசீப் அகமது (134), M. அகமது அயான் அஹித் (134), A. ஷர்ஃபி அகமது (134), M.I. ஆயிஷா (132), R.M.S. பாத்திமா அமானி (132) ஆகிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் 2025 தரம் ஐந்தாம் ஆண்டுபுலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதள்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின்போது பாடசாலை அபிவிருத்திக் குழுவினரால் அவசர தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது அத்துடன் “2025ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களால் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

பாரவையாளர்களைப் பரவசப்படுத்தும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் றமீஸ் அபூபக்கர், பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் இம்தியாஸ் உள்ளிட்ட மாணவர்களின் பெற்றோரும் அதிபரினால் அழைக்கப்பட்ட அதிதிகளும் ஆசிரியர்களும் மாணவர்களுமாக மண்டபம் நிறைந்திருந்தது.

No comments: