
எல்ல - வெல்லவாய பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து விழுவதற்கு முன்பு அதன் பிரேக் செயலிழந்ததாக சாரதி கத்தியதாகவும் அப்போது பயணிகள் அனைவரும் சிரித்ததாகவும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேருந்து விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், பிரேக் செயலிழந்து விட்டதாக சாரதி கூறினார். அப்போது நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் சிரித்தனர்.
சில பயணிகள், சாரதியை பார்த்து பொய் கூற வேண்டாம் எனவும் கூறினர். அதனையடுத்து, உண்மையில் பிரேக் செயலிழந்ததை பயணிகள் உணர்ந்துகொண்டனர்.
எதிரே வந்த வாகனத்துடன் மோதியே பேருந்து கீழே விழுந்தது. அதன்பின்னர், நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்.
வைத்தியசாலையில் கண் விழிக்கும் போதே உயிருடன் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் எனக்கு சுயநினைவு இருக்கவில்லை. அதன் பின்னர், ஒரு குழந்தை கத்தும் சத்தத்தை கேட்ட பின்னரே சுயநினைவு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 09.00 மணியளவில், எல்ல – வெல்லவாயைச் சாலையில் மகவாங்குவ “மவுண்ட் ஹேவன் ஹால்” அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வெல்லவாயை நோக்கிச் சென்றிருந்த சுற்றுலா பேருந்தொன்றை, எதிரே வந்த ஜீப் வாகனம் மோதியதில், பேருந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் மோதி, சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கினுள் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் 09 பெண்களும், 06 ஆண்களும் என மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 05 பெண்கள், 06 ஆண்கள், 03 சிறுவர்கள், 02 சிறுமிகள் என 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் தியத்தலவ, பண்டாரவெள மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்துக்கு தொடர்புடைய ஜீப் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் எல்ல பொலிசார் மேற்கொண்டுள்ளனர்
No comments: