News Just In

9/05/2025 01:55:00 PM

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!



ஆப்கானிஸ்தானின் தொலைதூர தென்கிழக்கு பகுதியில் வியாழக்கிழமை (04) இரவு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஆறு நாட்களில் அங்கு ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் ஆகும்.

முதல் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 08:56 மணிக்கு (கிரீன்விச் நேரம் 15:36) ஏற்பட்ட அண்மைய நிலநடுக்கத்தால் நங்கர்ஹார் மற்றும் குனார் மாகாணங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் தங்குமிடங்களை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை.

ஆனால், காயமடைந்த 17 பேர் குனார் மாகாண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,368 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 2,180 பேர் காயமடைந்தனர் என்று 25 கிராமங்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் (OHCA) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியின் கரடுமுரடான மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பு மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு தொடர்ந்து இடையூறாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

நிலச்சரிவுகளின் இடிபாடுகள் தொலைதூர கிராமங்களுக்கான அணுகலைத் துண்டித்ததால், பெரும்பாலும் மீட்பு பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் நடத்தப்பட்டன.

இதனிடையே, ரஷ்யாவால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டஆப்கானிஸ்தானை தாலிபான் அரசாங்கம் சர்வதேச உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா அவசர நிதியை வெளியிட்டுள்ளது.

அதே நேரம், அனர்த்தத்துக்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்து £1 மில்லியன் ($1.3 மில்லியன்) உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் பல பிளவுக் கோடுகளின் மேல் ஆப்கானிஸ்தான் அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

2023 ஆம் ஆண்டில், ஹெராத் நகருக்கு அருகில் மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதற்கு முந்தைய ஆண்டு, கிழக்கு ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் குறைந்தது 1,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3,000 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: