News Just In

9/09/2025 07:38:00 AM

சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதா? -பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து இன்று தீர்மானம் - காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்

சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதா? -பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து இன்று தீர்மானம் - காணாமல் போனோர் பற்றிய அலுவலகம்


பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பதற்கான தேவைப்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயப்படும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக பெயரிடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அவரது மனைவி ஊடாக அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அதனையடுத்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிரதிநிதிகள் அவரை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து அவரிடம் விடயங்களை கேட்டறிந்திருந்தனர்.இருப்பினும் அச்சந்திப்பில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த மற்றும் நிறைவேற்று அதிகாரி ஜெகநாதன் தற்பரன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் அச்சந்திப்பில் பங்கேற்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் போதுமானவையா என்பது குறித்து இன்றைய தினம் நடைபெறவிருக்கும் அலுவலகத்தின் நிர்வாகசபை கூட்டத்தில் ஆராயப்படுமெனவும் அதன்பின்னர் அவரை மீண்டும் சந்திப்பதா இல்லையா என்பது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் மகேஷ் கட்டுலந்த  தெரிவித்தார்.

No comments: