News Just In

9/08/2025 03:56:00 PM

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சி

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சி
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பரந்துபட்ட அளவில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளின் ஓரங்கமாக தெரிவு செய்யப்பட்ட சமாதானச் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில் தேசிய மட்டத்தில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலைமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளின் முனைப்பாக இந்தப் பயிற்சிகள் தொடராக இடம்பெற்று வருகின்றன.

“அமைதியைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும்” எனும் இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மூன்று நாள் வதிவிடப் பயிற்சிநெறி மட்டக்களப்பு தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் வார இறுதி நாட்களில் இடம்பெற்றது.

இப்பயிற்சி நெறிகளில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 25 சமூக சமாதான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நெறிகளில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் திட்ட வளவாளர் எஸ்.திலீபன், திட்ட சிரேஷ்ட இணைப்பாளர். ஐ. சுதாவாசன், உட்பட தந்தை செல்வா அறக்கட்டளையைச் சேர்ந்த இன்னும் பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தந்தை செல்வா அறக்கட்டளை மூலம் அறிவுசார் கல்வி, சமாதானம், பாதிக்கப்பட்ட மக்களின் கலை கலாசார பண்பாட்டு மீட்சி, சமாதான எண்ணக்கருக்களை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, சமாதான எண்ணக்கரு குறித்த செயற்பாடுகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு சமாதானத்தை நோக்கிய அகன்ற பார்வையைக் கொண்டு சேர்ப்பித்தல் இடம்பெறவேண்டும் என்ற பரந்த நோக்கத்தின் அடிப்படையில் சமாதான வலையமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் இந்த மகோன்னத பணியைக் கருத்திற்கொண்டு இயங்கி வருகின்றது.

No comments: