News Just In

6/02/2025 11:01:00 AM

மாகாண சபை முறைமை வேண்டாம் : ஐக்கிய மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் யஹியாகான்!

மாகாண சபை முறைமை வேண்டாம் : ஐக்கிய மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் யஹியாகான்


நூருல் ஹுதா உமர்

மாகாண சபை முறைமை எமக்கு வேண்டாம். மாகாண சபைக்கு உள்ள சில அதிகாரங்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு என அக் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமையால் வீண் செலவுகளே ஏற்படுகிறதே தவிர மக்கள் அடைந்த பயன் எதுவுமில்லை என்றும் யஹியாகான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டினார். பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து ஏனைய சில அதிகாரங்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்குவதே தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமைக்கு வலுச்சேர்க்கும்.

நாடு இன்று எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்த வேண்டும் என்றால் வீண் விரயங்களை ஒழிக்க வேண்டும். அந்த வகையில் மாகாண சபை முறைமையையும் ஒழித்து ஓர் ஆட்சி மிளிர வேண்டும். ஐக்கிய மக்கள் காங்கிரஸ் இதனையை வலியுறுத்துகிறது.எமது கொள்கைக் கோட்பாடும் இதுதான் .

கடந்த காலங்களில் மாகாண சபை ஒரு சில கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒரு தொழிலாக அதனை மேற்கொண்டு வந்தனர். மாறாக அபிவிருத்தி என்று பார்த்தால் எதுவும் இல்லை. மக்களும் எந்த ஒரு பயனையும் அடையவில்லை. எனவே மத்திய அரசு, மாகாண சபை முறைமையை ஒழித்து மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நேரடியாக செய்வதே சிறந்தது .

மாகாண சபை என்ற போர்வையில் அதிக நிதி வீண் விரயம் ஆக்கப்பட்டுள்ளது. பெயரளவில் இயங்கிய பல நிறுவனங்கள் மாகாண சபையில் காணப்படுகின்றன. இவைகளுக்கும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செலவுகளை குறைத்து வீண் விரயத்தை இல்லாமல் செய்யும் அரசாங்கம் என்பதனாலேயே இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம் என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.

No comments: