
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நல்லூர் ஆலயத்தின் சூழமைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாமிச உணவகம், சைவ மக்களின் மனங்களுக்கும், ஆன்மீக உளவியலுக்கும் மதிப்பளிக்காமல் நடத்தப்படுவது குறித்து மக்கள் எமக்கு முறையிட்டு வருகின்றார்கள்.
சைவ மக்களின் ஆன்மீக உளவியலுக்கு இடையூறை ஏற்படுத்தும் குறித்த மாமிச உணவகத்தில் மாமிச உணவு தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றாகத் தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.மாநகர சபைக்கு முன்பாக நல்லூர் கந்தசுவாமி பெருந்திருவிழா காலத்தில் முதலாவது உற்சவகால வீதித்தடை அமைக்கப்படும் இடத்தில் குறித்த அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்திருவிழா காலத்தில் நல்லூர் கந்தனின் அருளாசி வேண்டி நல்லூர் காவடிகள் அணிவகுத்து நிற்கும் வீதிக்கு அருகில் இவ்வாறான கடைகள் ஏற்புடையது அல்ல என பொதுமக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்
மேலும், நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயம் அமைந்திருக்கின்ற சுற்றுவட்டப் பகுதிக்குள் ஒரு அசைவ உணவகம் ஆரம்பிப்பது என்பது ஏற்புடையதாக இல்லை என்றும் அது சுற்றி வட்டத்திற்குள் பல அசைவ உணவங்களை தோற்றுவிப்பதற்கான விதையாகவும் அமைந்துவிடும் என யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்,
No comments: