
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
முன்னதாக பதில் பொதுச்செயலாளராக இருந்த பத்மநாதன் சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாக பதவி விலகியதை அடுத்து, எம்.ஏ.சுமந்திரன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சுமந்திரன் கட்சி ரீதியில் வெளியிடும் கடிதங்கள் மற்றும் அறிவிப்புக்கள் அனைத்திலும், தனது பதவியை குறிப்பிடும் போது பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு வருகின்றார்.
இது, தமிழ் அரசியல் தரப்புகளில், பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளதுடன் கட்சியின் யாப்பு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அதற்கிடையில், சுமந்திரன் பதில் பொதுச்செயலாளர் என குறிப்பிடாமல் இருப்பது கட்சியில் தான் முதல் என்பதை காட்டிக் கொள்ள தான் எனவும், இதன் பின்னணியில் தமிழரசு கட்சி அழிவை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது எனவும் பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்," பதவி முத்திரை குறித்து சுமந்திரனின் நடவடிக்கை பார்க்கையில், தமிழரசு கட்சியின் பதில் செயலாளராக இருந்து கொண்டு அதுவும் ஒரு சட்டத்தரணி தெரியாமல் எதனையும் செய்ய மாட்டார்.
எனவே, இதன் மூலம் அவர் பதிவு செய்வது, நான் தான் தமிழரசு கட்சியில் சர்வ வல்லமை படைத்தவர் என்ற இருமாப்போடு தான். இல்லை என்றால் அவர் பதில் பொதுசெயலாளர் என்றே குறிப்பிடுவார்.

சத்தியலிங்கம் எழுதிய அனைத்து கடிதங்களிலும் அவர் பதில் பொதுசெயலாளர் என்று தான் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் இவ்வாறு செயற்படுவது நான் தான் என்பதை காட்டிக் கொள்வதற்கு தான்.
அதேவேளை, தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரான சி.வி.கே.சிவஞானம், வேறு யாராக இருந்திருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வந்திருப்பார்.
ஆனால், தற்போது அவரும் சுமந்திரனின் கட்டுபாட்டில் இருப்பதால் அவரும் மூச்சு விட மாட்டார்” என அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் குறிப்பிட்டுள்ளார்
No comments: