சென்னைக்கு நான்காவது தொடர்ச்சியான தோல்வி; பஞ்சாப் 3ஆவது வெற்றியை சுவைத்தது

மல்லன்பூர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (08) இரவு மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 22ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் 18 ஓட்டங்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் கடந்த 4 போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியைத் தழுவியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் 24 வயதுடடைய ப்ரியான்ஷ் ஆரியா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்து பஞ்சாப் கிங்ஸை சிறந்த நிலையில் இட்டார்.
ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்து கொண்டிருக்க, மறுபக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரியான்ஷ் ஆரியா 42 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களுடன் 103 ஓட்டங்களைக் குவித்தார்.
8ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் க்ளென் மெக்ஸ்வெல் 5ஆவதாக ஆட்டம் இழந்தபோது பஞ்சாப் கிங்ஸின் மொத்த எண்ணிக்கை 83 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், ப்ரியான்ஷ் ஆரியா, ஷஷான்க் சிங் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
தொடர்ந்து ஷஷான்க் சிங், ஜென்சன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 38 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 219 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ஷஷான்க் சிங் 52 ஓட்டங்களுடனும் மார்க்கோ ஜென்சன் 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் கலீல் அஹ்மத் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
நியூஸிலாந்து வீரர்களான ரச்சின் ரவிந்த்ரா, டெவன் கொன்வே ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரச்சின் ரவிந்த்ரா 36 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் ஒரு ஓட்டத்துடன் நடையைக் கட்டினார்.
தொடர்ந்து டெவன் கொன்வேயும் இம்ப்பெக்ட் வீரர் ஷிவம் டுபேயும் 3ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஷிவம் டுபே 27 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

17.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 171 ஓட்டங்களாக இருந்தபோது டெவன் கொன்வே 69 ஓட்டங்களுடன் சுயமாக ஆட்டம் இழந்தார்.
துடுப்பாட்ட வரிசையில் தன்னை உயர்த்திக்கொண்டு 5ஆம் இலக்க வீரராக களம் புகுந்த எம்.எஸ். தோனி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இரசிகர்களை மகிழவைத்தார். ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி 27 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 12 பந்துகளை எதிர்கொண்ட தோனி ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களை விளாசினார்.
எவ்வாறாயினும் கடைசி 5 பந்துகளில் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 28 ஓட்டங்களில் 9 ஓட்டங்களையே சென்னையினால் பெற முடிந்தது.
பந்துவீச்சில் லொக்கி பேர்கசன் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்
No comments: