News Just In

1/23/2025 02:52:00 PM

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் தெங்கு உற்பத்திக்கு ஏற்ற வளமான மண்ணும் சூழலும் ஆறாயிரம் தென்னங்கன்றுகளுக்கு மேல் விநியோகம்

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் தெங்கு உற்பத்திக்கு ஏற்ற வளமான மண்ணும் சூழலும்ஆறாயிரம் தென்னங்கன்றுகளுக்கு மேல் விநியோகம்  !பிரதேச செயலாளர் அனஸ்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அடி நிலையிலுள்ள குடும்பங்களுக்கு போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் இயற்கை விவசாய உணவுப் பாதுகாப்பு பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தெரிவித்தார்.

வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அமுலாக்கத்தினூடாக ஈராயிரம் தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பாரம்பரிய, சிறந்த ரக, நீண்ட காலப் பயன் தரும் தென்னங் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு வெருகல் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ. திலீப்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அனஸ், கடலை அண்டிய வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு தென்னை உற்பத்திக்கு வளமான பிரதேசமாக இருந்தபோதிலும் இங்குள்ள மக்கள் தென்னை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலேயே அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி அதிகமதிகம் தென்னங்கன்றுகளை இந்தப் பிரதேசத்தில் விநியோகித்து வருகின்றோம். தென்னை உற்பத்தியை ஊக்குவித்து மக்களின் பொருளாதார போஷாக்கு நிலைமைகளை மேம்படுத்துவதற்கு உதவியாக இளைஞர் அபிவிருத்தி அகமும் இணைந்து கொண்டுள்ளது. வீட்டில் இரு தென்னை மரங்கள் வளர்ந்து காய்க்கத் தொடங்கினால் அதன் மூலம் தற்போதைய நிலவரப்படி குடும்பச் செலவில் மாதாந்தம் சுமார் பன்னீராயிரம் ரூபாவை மீதப்படுத்த முடியும். அதுபோக தென்னை மரத்தில் அதன் வேர் தொடங்கி ஓலை வரை அத்தனையுமே பயன்தரும் பொருட்கள்தான். அதனால் தென்னை வளர்ப்பில் அக்கறையெடுத்து பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.இங்கு வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்குடும்பம் ஒன்றுக்கு தலா 10 வீதம் 500 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர்களான பி. ஜெயசீலன், பி. லதா, எம். அதிர்ஷ்டரூபி, இளைஞர் அபிவிருத்தி அகம்; நிறுவனத்தின் களப் பணியாளர் கே.குஜேந்தன் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்

No comments: