News Just In

1/12/2025 06:02:00 PM

அதிகரிக்கப்பட்ட ஆதனவரி அறிவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஏறாவூர் நகர சபைச் செயலாளருக்கு பணிப்பு!

அதிகரிக்கப்பட்ட ஆதனவரி அறிவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஏறாவூர் நகர சபைச் செயலாளருக்கு பணிப்பு



(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

அதிகரிக்கப்பட்ட ஆதனவரி அறிவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஏறாவூர் நகர சபைச் செயலாளருக்கு மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பார்த்தீபனால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வழமையாக இருந்து வந்த வரி அறவீட்டை அதிகரிக்கும் வகையில் ஏறாவூர் நகர சபைச் செயலாளரினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி ஜனநாயக மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். அப்துல் வாஜித், கிழக்கு மாகாண ஆளுநர், முதலைமச்சுச் செயலாளர், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தின் பிரகாரம் ஏறாவூர் நகர சபைச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ள மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர பார்த்தீபன்;,

ஏறாவூர் நகர சபை முறையற்ற வரி அதிகரிப்பை இடை நிறுத்த கோரல் எனும், மேற்படி விடயம் சார்பாக, கௌரவ ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு எமக்கு பிரதியிடப்பட்ட, பொதுச் செயலாளர், ஜனநாயக மக்கள் கட்சி, கிழக்கு பிராந்தியம் அவர்களின் 2024.01.06 ஆம் திகதிய கடிதம் சார்பாக,

தங்களது உள்ளுராட்சி மன்றத்தில் புதிய ஆண்டிற்கான ஆதனவரிக்கான ஆரம்ப அறிவித்தல் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆதன வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஆதனவரி அதிகரிப்பிற்கான அனுமதி தங்களுக்கு கிடைக்கும் வரை, அதிகரிக்கப்பட்ட ஆதனவரி அறிவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு அறியத்தருவதுடன், தாங்கள் நடைமுறையில் இருந்த (பழைய) ஆதனவரியினையே அறவிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கின்றேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனநாயக மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். அப்துல் வாஜித், முன்னதாக அனுப்பி வைத்திருந்த முறைப்பாட்டுக் கடிதத்தில்,

ஏறாவூர் நகர சபை எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கு ஆதன வரி அறவிடுவதற்கான ஆரம்ப அறிவித்தல் ஏறாவூர் நகர சபையினால் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரியை அதிகரிப்புச் செய்வதாயின் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டு வர்த்தமானியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என நகர சபை கட்டளைச் சட்டம் பிரிவு 160 (3) சுட்டிக்காட்டுகின்றது.

தற்போது மாகாண சபை இயக்கமின்றி உள்ள நிலையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநராகிய தாங்களே வரி அதிகரிப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயம் தாங்கள் வரி அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கி இருக்கமாட்டீர்கள் என நம்புகின்றேம்.

எனவே தாங்கள் இவ்வாண்டு அதனை வரி அறவீட்டின் அதிகரிப்பிற்கு ஏறாவூர் நகர சபைக்கு அனுமதி வழக்கவில்லையாயின் உடனடியாக இவ்விடயத்தில் கவனம் செலுத்தி ஆதன வரி அதிகரிப்பை இடை நிறுத்துவதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் நகர சபை கட்டளைச் சட்டங்களை முறையாக பின்பற்றி வரிகளை அறவீடுவதற்கு ஏறாவூர் நகர சபைக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments: