News Just In

12/16/2024 12:55:00 PM

சமூகக் கட்டமைப்புக்களினால் வடிவமைக்கப்பட்ட கருத்தியல்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பெண்களின் விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் விலகி இருந்து வந்துள்ளோம்!

சமூகக் கட்டமைப்புக்களினால் வடிவமைக்கப்பட்ட கருத்தியல்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பெண்களின் விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் விலகி இருந்து வந்துள்ளோம்

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சமூகக் கட்டமைப்புக்களினால் வடிவமைக்கப்பட்ட கருத்தியல்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பெண்களின் விவகாரங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் விலகி இருந்து வந்துள்ளோம், ஆனால் அவற்றை இனிமேலும் அடியொற்றி நடக்காமல் மூடத்தனங்களை மாற்றியமைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தெரிவித்தார்.

“மாண்புடன் கூடிய மாதவிடாய்:” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச நிகழ்வை அனுஷ்டிக்கும் முகமாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“மாண்புடன் கூடியதாக மாதவிடாய் செயற்பாட்டை நிலைநிறுத்துவதற்கு பாலியல் உற்பத்தி சுகாதார உரிமைகளே அடிப்படை” எனும் இவ்வாண்டிற்கான தொனிப் பொருளில் அமைந்த நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றன.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் சனிக்கிழமை 14.12.2024 இடம்பெற்ற இந்நிகழ்வகளில் பங்குபற்றி தொடர்ந்து உரையாற்றிய மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா சமூகக் கட்டமைப்புக்களினால் வடிவமைக்கப்பட்டு காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பிற்போக்குவாத கருத்தியல் காரணமாக பெண்களின் நலன்கள், மதிப்புக்கள் பேசப்படாது மறைக்கப்பட்டுக் கொண்டு வந்துள்ளன.

மாதவிடாய் எனும் விடயத்தை மறைக்காது துணிவுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான காலம் இப்பொழுது கைகூடி வந்துள்ளது. தொலைக்காட்சிகளில் கூட இப்பொழுது இதுபற்றி விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன.

விழுது ஆற்றல் மே;ம்பாட்டு மையம் முன்னெடுத்துள்ள இதுவரை காலமும் பேசப்படாது மறைக்கப்பட்டு வந்துள்ள ஆனால், கட்டாயம் பேசப்பட வேண்டிய பெண்களின் மாண்புறும் மாதவிடாய் எனும் விடயத்திற்கு மாவட்டச் செயலக நிருவாகத்தின் முழுமையான ஆதவை நான் வழங்குவேன்.” என்றார்.

இந்நிகழ்வு பற்றித் தெளிவூட்டிய விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி,

இளவயதுத் திருமணங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இந்தக் குற்றச் செயல்களுக்கான காரணங்களை ஆராயும்போது அதற்குப் பின்னணியில் மாதவிடாய் பற்றிய தெளிவு பெண்களிடமும் ஆண்களிடமும் இல்லாதது கண்டறியப்பட்டது. நாம் ஆரம்பித்த சிறுவர் கழகங்களின் ஊடாக பிள்ளைகளின் தாய்மாரும், பெண் பிள்ளைகளும் இந்த விடயங்களை முன்வைக்கத் துவங்கினார்கள்.

எனவே, ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயத்திற்கு கூடுதல் கவனமெடுக்க வேண்டும் என்பது சிபார்சுகளாக முன்வைக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே மாண்புறும் மாதவிடாய் எனும் இந்தத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது ” என்றார்.

இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி சகாய தர்ஷினி ஜெயகுமார், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிருவாக அலுவலர் கந்தன் நிர்மலா, திட்ட உத்தியோகத்தர் புண்ணியமூர்த்தி ஜீவிதா, சமூக ஒருங்கிணைப்பாளர்களான பி. முரளீதரன், கே. சிந்துஜா, கே. லக்ஷானா, கே. துதர்ஷன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் அகல்யா டேவிட் ஆகியோருட்பட, ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்

No comments: