News Just In

12/11/2024 09:07:00 AM

வடக்கு கிழக்கில் கனமழை 14 ஆம் திகதி வரை தொடரும்; மீண்டும் வெள்ளப்பெருக்கு!

வடக்கு கிழக்கில் கனமழை 14 ஆம் திகதி வரை தொடரும்; மீண்டும் வெள்ளப்பெருக்கு!






வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 14 ஆம் தகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்து (Well Marked Low Pressure System) தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 325 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து (அதன் உள் வளையம் வடக்கு மாகாணத்தினை உள்ளடக்கியதாக நகர்ந்து) மன்னார் வளைகுடாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது ( நகர்வுப் பாதை மாற்றத்திற்கு உட்படும்)

இதன் உள் வளையத்தின் தென்னரைப்பகுதி வடக்கு மாகாணத்தினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று இரவு முதல்(11) எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நாம் அனைவரும் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

நாம் எச்சரிக்கையாக இருந்து பாதிப்புக்கள் இல்லை என்றால் நாம் இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால் அசட்டையாக இருந்து பாதிப்புக்கள் இருந்தால் அதனை இலகுவாக நிவர்த்திக்க முடியாது.

நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காது சற்று அவதானமாக இருப்பது அவசியம்.

இது மழைக்காலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இன்று வரை வடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரியான மழைவீழ்ச்சி 1240 மி.மீ. இனை விட 705 மி.மீ. அதிகமாகக் கிடைத்து உள்ளது. கிழக்கு மாகாண ஆண்டுச் சராசரியான 1850 மி.மீ. இனை விட 580 மி.மீ. கூடுதலாக கிடைத்துள்ளது. இதனால் இனி 24 மணித்தியாலத்தில் 100 மி.மீ. இற்கு மேல் மழை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது யாழ்ப்பாண நகரம், கிளிநொச்சி நகரம், மன்னார் தீவு போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினை உருவாக்கும்.

பொதுவாக விளக்கீட்டு காலப்பகுதியில்( கார்த்திகை தீபம்) நிச்சயமாக மழை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இம்முறையும் அந்த நம்பிக்கை உண்மையாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை பகுதிகளுக்கு கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு (யாழ்ப்பாணம்), கிழக்கு(கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை), வட மேற்கு (மன்னார், புத்தளம்) தென்கிழக்கு(அம்பாந்தோட்டை ) கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக் காரணம் கொண்டும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

இன்று இரவு முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. இனை விட அதிகமாக இருக்ககூடும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.



No comments: