News Just In

11/29/2024 07:17:00 PM

நினைவேந்தல் முடிவுற்றது – அடுத்தது?

நினைவேந்தல் முடிவுற்றது – அடுத்தது?



இம்முறை மாவீரர் தினம் தடைகள் இன்றி நினைவுகொள்ளப்பட்டிருக்கின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் இவ்வாறானதொரு சூழல் நிலவியதில்லை. இது அநுரகுமார அரசாங்கத்தினால்தான் என்பதையும் மக்கள் புரிந்திருப்பர். இவ்வாறானதொரு சூழலைத்தான் மக்களும் விரும்பியிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரையில், தங்களின் பிள்ளைகளை நினைத்து, மனமுருகி, கண்ணீர் சிந்துவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது.

உண்மையில் எந்தவோர் அரசியல் தலையீட்டையும் அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தியாகங்களை அரசியலாக்கும் தகுதி நாடாளுமன்ற போட்டிப் பரீட்சை அரசியல் வாதிகளுக்கு இல்லை என்றே அவர்கள் நம்புகின்றனர் போலும். அவ்வாறு செய்வதை மக்கள் வெறுக்கின்றனர். அது சரியானதுதான். வடக்கின் கொதிநிலையை வைத்து தங்களின் ஆதாய அரசியலை முன்னெடுக்க முற்படும் தென்னிலங்கை சக்திகளுக்கும் சில விடயங்கள் தேவைப்பட்டன. அதேபோன்று, தென்னிலங்கையின் தடைகளை முன்வைத்து, அரசியல் செய்யவேண்டிய தேவையுள்ளவர்கள் வடக்கு கிழக்கிலும் இல்லாமலில்லை.

ஆனால், இம்முறை மேற்படி இரண்டு தரப்புக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் அநுர அரசாங்கம் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. அநுர அரசாங்கம் இந்த நிலைமையை தொய்வில்லாமல் தொடருமாயின், காலப்போக்கில் இது ஒரு சாதாரண விடயமாக மாறிவிடும். பொலிஸாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள். மாவீரர் தினத்தை அனுமதித்தால் அது விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்கு வழிவகுக்கும் என்னும் கதையை, அவ்வப்போது, தென்னிலங்கை அடிப்படைவாதிகள் கூறிவந்திருக்கின்றனர்.இது அடிப்படையிலேயே தவறான புரிதல் என்பது இலங்கையின் அரச இயந்திரத்துக்கும் தெரியாத ஒன்றல்ல – ஆனால், அரசியல் தலைமைகளின் தேவைக்காக அவர்களும் அமைதியாக ஒத்துழைத்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை எவராலும் மீளுருவாக்கம் செய்ய முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஒரு முடிந்த கதை. மக்கள் இப்போது அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பது – கொட்டும் மழையிலும் கூட, மழைநீருடன் தங்கள் கண்ணீரையும் கலந்தது, விடுதலைப் புலிகள் தொடர்பானதுமல்ல – மாறாக அவர்களது பிள்ளைகள், உறவுகள் தொடர்பானது. கடந்த பதினைந்து வருடங்களில் அதிகம் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களாக தங்களை காண்பித்தவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்காரர்கள்தான் ( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ) ஆனால், தேர்தலில் அவர்களை ஒரு பிரதான தரப்பாக மக்கள் இன்று வரையில் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏனெனில், மக்கள் விடுதலைப் புலிகளை (உயிர் கொடுத்த தங்களின் பிள்ளைகளை ) முன்வைத்து நாடாளுமன்ற கதிரைகளுக்காக அடிபடுவதை சகித்துக்கொள்ளவில்லை – அதனை அவர்கள் வெறுக்கின்றனர். இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளை முன்வைத்து அரசியல் பேசும் தரப்புகள் எவருக்கும் மக்கள் பெருவாரியாக ஆதரவளிக்கவில்லை. அதேவேளை நாங்கள் முன்னாள் போராளிகள் – எங்களை ஆதரியுங்கள் என்று கூறுபவர்களையும் மக்கள் ஆதரிக்கவில்லை. இதனை சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது புரிந்துகொண்டு, அரசியல் செயல்பாடுகளை, தங்களுக்குரிய தனித்துவத்துடன் முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.

மக்கள் கொட்டும் மழையிலும் நனைந்து, தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பதை, பாருங்கள் இதோ தேசம் திரண்டுவிட்டதாகக் கூறி, மக்களின் உணர்வுகளை மீண்டும் கொச்சைப்படுத்தாதீர்கள். நினைவு தினங்கள் இனியும் வரும் – மக்கள் வழமைபோல் திரள்வார்கள். எனவே அதற்காக காத்துக்கொண்டிருக்கும் கையறுநிலை அரசியலை மேற்கொள்ளாமல், உங்களின் அரசியல் செயல்பாடுகளை தனித்துவமாகவும், காலப்பொருத்தம் கருதியதாகவும், எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பது தொடர்பில் சிந்தியுங்கள். இனியாவது அடுத்தவர்களின் தியாகங்களை வியாபாரம் செய்யும் அரசியலை கைவிடுங்கள்
நன்றி ஈழநாடு 

No comments: