News Just In

11/07/2024 06:12:00 PM

அநுர அலையில் சிதறும் தமிழினம்!


அநுர அலையில் சிதறும் தமிழினம்! 


அன்று கோட்டாபய(Gotabaya Rajapaksa) அலை போன்று இன்று அநுர(Anura Kumara Dissanayaka) அலையில் சிங்கள தேசம் மூழ்கிப் போயுள்ளது. இலங்கை அரசியலில் புதிய யுகம் ஏற்பட்டுள்ளது.

அநுர அலையில் தமிழர்களும் மூழ்கிப் போயுள்ளமை இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது.

இது மாற்றத்திற்கான ஆரம்பமா அல்லது தமிழினத்தின் அழிவிற்கான ஆரம்பமான என்பது பலரின் கேள்வியாக தற்போது மாறியுள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அதன் தாக்கம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) வெற்றி பெறும் என அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிங்கள தேசத்தின் பாரம்பரிய கட்சிகள் தமது சுயத்தை இழந்து புதிய சின்னங்களில் தேர்தலை எதிர்கொள்கின்றமையே இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அது எவ்வாறாயினும் தமிழர் தாயகப் பரப்பில் அநுர அலையின் தாக்கம் எவ்வாறு ஏற்பட்டது, இதன் பின்னணி என்பது குறித்து கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடுகிறது. இதில் அதிகளவான தமிழர்களும் அநுர கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.

அதேவேளை தமிழர்கள் நலன்சார்த்த, தமிழ்தேசிய கோட்பாட்டுக்கு உட்பட்ட கட்சிகளும் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இம்முறை தேர்தல் என்பது சிறுபான்மை மக்களுக்கு பெரும் பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பிளவுபட்டுள்ளதுடன், பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் மக்களால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாரம்பரிய கட்சிகளை பின்புலமாக கொண்ட பலர் தோல்வி அடையக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான தமது கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 113 என்ற ஆசனங்களை பெறாத பட்சத்தில், அவர்கள் சிறுபான்மை கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன்போது பேரம் பேசுதலின் மூலம் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்க முடியும்.

இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பலர் போட்டியிடுகின்றனர். அவ்வாறானவர்கள் வெற்றி பெற்றால், அது தமிழர்களுக்கு ஆபத்தானதொன்றாகவே மாறும். அவர்களின் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் ஆசனமாகவே அது மாறும்.

இதன்மூலம் தமிழர்கள் என்ற தனித்துவம் இழக்கப்படும். தமிழர்களின் நாடாளுமன்ற அங்கத்துவம் குறையும். இதன்மூலம் சர்வதேச ரீதியாகவும் நாம் தோல்வி அடைந்த சமூகமாக மாறுவோம்.


இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றார்கள். அவர்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் இல்லை என்ற எடுகோளை நாமே சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் செயலாக இது மாறும்

No comments: