தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்ட சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை - சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற நமக்காக நாம் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்ட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் சஜித் பிரேமதாச. சேர்ந்திருந்த வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் நீதிமன்றம் மூலம் பிரிக்க நடவடிக்கை எடுத்தவர் அனுரகுமார. மூன்று வேட்பாளர்களும் குட்டையில் ஊறிய மட்டைகள்.
நாமல் பற்றிக் கூறவே தேவையில்லை. இராஜபக்சக்களின் மோசமான இனவாத தோற்றத்திற்கு அவர் மெருகூட்டி வருகின்றார். எந்த சிங்கள வேட்பாளர் வந்தாலும் வடக்குக் கிழக்கின் நிலங்கள் கையேற்கப்படுவதுடன் அவற்றின் தொடர்ச்சி துண்டிக்கப்படுவதும், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதும் பௌத்த கோவில்கள் கட்டப்படுவதும் ஓயாமல் நடக்கப் போகின்றன.
எமது இளைஞர்கள், படித்தவர்களும் பாமரர்களும், நாளாந்தம் வெளிநாடுகளுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றார்கள். எமது சனத்தொகை இதனால் குறையப் போகின்றது.
ஆகவே சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு எம் மக்கள் வாக்களிப்பது இவ்வாறான தமிழர் எதிர்ப்பு செயல்களை முடக்கி விடப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இதனால்த்தான் எமது தமிழ் வேட்பாளருக்கு உங்கள் மேன்மையான வாக்குகளை அளியுங்கள் என்று கேட்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்
No comments: