News Just In

8/11/2024 05:57:00 PM

ராஜகிரியவில் சிக்கிய ஆயுதங்களின் பின்னணி அம்பலம் !



வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான "கோதா அசங்க" என்பவரின் ஆயுதங்களை இரகசியமாக மறைத்து வைத்திருந்த சிறைக்காவலர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைக்குண்டுகள் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த 7 சந்தேகநபர்கள் அண்மையில் மாகோல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவின் ஆலோசனைக்கு அமைய ராஜகிரிய, மதின்னாகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடொன்று சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது, ​​விசாரணை அதிகாரிகள் வீட்டின் மேல் தளத்தில் ஒரு ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்தனர்.

அந்த ரகசிய பதுங்கு குழியை சோதனையிட்ட போது, ​​அதில் பல ஆயுதங்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதன்போது T-56 ரக துப்பாக்கி, 300க்கும் மேற்பட்ட T-56 தோட்டாக்கள், 9mm ரக 50 தோட்டாக்கள், மைக்ரோ பிஸ்டல் மற்றும் ஹெரோயின், கஞ்சா மற்றும் குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்களும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீட்டின் உரிமையாளரான 44 வயதான சிறைச்சாலை காவலரும் இங்கு கைது செய்யப்பட்டதுடன், இந்த ஆயுதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான "கோதா அசங்க" என்பவருடையது என்று சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.

கடந்த காலங்களில் கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுக்கு இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்

No comments: