ஆயுர்வேத மருந்தகத்திற்கு எந்த நேரம் சென்றாலும் வைத்தியர் கடமையில் இருப்பதில்லை; சபையில் உரையாற்றிய உறுப்பினர்
அபு அலா
இறக்காமம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமையாற்றும் வைத்தியர் கடந்த 7 வருடங்களாக தனது கடமை நேரத்தில் மருந்தகத்தில் இருப்பதில்லை என்றும் அவ்விடயத்தை ஊழியர்கள் மறைத்து வருகின்றார்களென இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ரஜா நேற்று இடம்பெற்ற (14) சபை அமர்வின்போது உரையாற்றினார்.
இறக்காமம் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (14) தவிசாளர் எம்.முஸ்மி தலைமையில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான சிகிச்சைகளையும், வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக எந்த நேரம் மருந்தகத்திற்குச் சென்றாலும் வைத்தியர் கடமையில் இருப்பதில்லை என்றும் அவர் இப்போதுதான் வெளியே சென்றுள்ளார் என்றே பதில் மட்டுமே ஊழியரினால் வழங்கப்பட்டு வருவதாக மக்களின் தொடரான முறைப்பாட்டினையடுத்து நோயாளியைப் போன்று குறித்த மருந்தகத்திற்கு சென்றிருந்தேன்.
ஆனால் மக்கள் வழங்கிய முறைப்பாடுகள் யாவும் 100 சதவீதம் உண்மையென்று சென்றே பின்பே நான் அறிந்துகொண்டேன்.
கடந்த 7 வருடங்களாக கடமையாற்றும் அந்த வைத்தியர் இத்தவறினை செய்தது மாத்திரமல்லாமல், மாதாந்த ஊதியம், மேலதிகக் கொடுப்பனவுகள் போன்றவற்றையும் முறையற்ற விதத்தில் பெற்றும் வந்துள்ளார். அதனை மறைக்கும் செயற்பாட்டில் அங்கு கடமையாற்றும் ஊழியர்களும் குறித்த வைத்தியருக்கு ஆதராவாகவும் ஈடுபட்டும் வந்துள்ளனர்.
குறிப்பாக, வைத்தியருக்குப் பதிலாக ஊழியர்களே நோயாளிகளுக்கு மருந்து வழங்கி வருகின்றதொரு அவல நிலையையும் நான் கண்டுகொண்டேன். இது எனக்கும் நடந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பான வீடியோவையும் வைத்துள்ளேன்.
No comments: