News Just In

7/27/2024 04:22:00 PM

காரைதீவு பிரதேசத்தில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் மரங்களை அகற்றுவது தொடர்பான பிரதேச மட்ட குழுக்கூட்டம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய மரங்களினை அகற்றுவது தொடர்பான பிரதேசமட்ட குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் திருமதி.ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (26) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.என்.மோகன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (காணிப்பிரிவு), தொழில்நுட்ப உத்தியோகத்தர், காணி வெளிக்கள போதனாசிரியர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு தொடர்புபட்ட நிறுவனங்களான மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு, அரச மரக்கூட்டுத்தாபனம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, கோட்டக் கல்வி அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம், இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், இலங்கை டெலிகோம், தீயணைப்பு படைப் பிரிவு(மாநகர சபை, கல்முனை) ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற இன்றைய பிரதேச மட்ட குழுக்கூட்டத்தில் பிரதான விடயமாக, காரைதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய மரங்களினை அகற்றுவது தொடர்பான களவிஜயம் இம்மாதம் 11,16 மற்றும் 17 ஆந் திகதிகளில் பிரதேச மட்ட களவிஜயக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருந்த போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, பாடசாலைகளில் அகற்றப்பட வேண்டிய மரங்கள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவல்களினை பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் அனுமதியுடன் வழங்கப்பட வேண்டும் எனும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

No comments: