News Just In

6/08/2024 12:20:00 PM

மின்சார சபையை ஒரு தனி நபரின் வியாபாராமாக மாற்றும் முயற்சி..!
மின்சார கட்டணம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தின் போது 06.06.2024. உண்மையில் இலங்கை மின்சார சபையானது இலங்கையிலுள்ள மக்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதை ஒரு சேவையாக முன்னெடுத்துவரும் ஒரு நிறுவனமாகவே நாம் பல தசாப்தங்களாக பார்த்து வருகிறோம். வேறு நாடுகளில் தமது சேவை வழங்குனர்களை மக்கள் தாமே தெரிவுசெய்யலாம். வேறு நாடுகளில் பல நிறுவனங்கள் காணப்படும். அதற்கமைய தமக்கான சேவை வழங்குனர்களை மக்களே தெரிவுசெய்து அவர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இலங்கையில் இலங்கை மின்சார சபை என்பது ஒரு அரச நிறுவனம் என்பதால் கடந்த பல தசாப்தங்களாக இது தொடர்பில் எவ்வித சிக்கலும் காணப்படவில்லை. ஏனெனில் இலங்கை மின்சார சபை சேவை வழங்கும் ஒரு நிறுவனமாகவே தொழிற்பட்டு வந்தது. அது ஒரு இலாபம் ஈட்டும் நிறுவனமாக தொழிற்படவில்லை. நமது நாட்டில் மக்கள் விரும்பினாலும் இல்லாவிடினும் மின்சாரத்தை விநியோகிக்கக் கூடிய ஒரே நிறுவனமாக இலங்கை மின்சார சபை மாத்திரமே தொழிற்பட்டு வருகிறது.


இலங்கை மின்சார சபையினால் என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும், என்ன விலையில் வழங்கினாலும், மின் வெட்டின் போது என்னென்ன மோசமான செயல்களை மேற்கொண்டாலும் நம் மக்களுக்கு இ.மி.ச.யை தவிர வேறு நாடுவதற்கு வேறு இடமில்லை. இந்த இலங்கை மின்சார சபையினால் மின் கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க நேரிட்டுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினாலும், உச்ச நீதிமன்றத்தில் இது அரசியலமைப்பிற்கு முரணானதா இல்லையா என்பது பார்க்கப்படுமே தவிர, இதன் நடைமுறை பிரச்சினைகள் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பார்ப்பது உச்சநீதிமன்றத்தின் பணியா இல்லையா என்பதை குறித்து எனக்கு கூற தெரியவில்லை.


ஆனால் மின் கட்டணம் ஊடாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு எல்லையற்ற அதிகாரங்கள், அமைச்சருக்கு தேவையான அளவு அதிகாரங்கள் எம்மால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகாரங்கள் இன்று அமைச்சருக்கு கிடைக்கின்றது என்பது தான் உண்மை. இவ்வாறானதொரு முக்கியமான சட்டமூலத்தை அவசரமாக இந்த பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது என்பது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்டமூலம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு கூட காலம் போதாது. இவ்வாறானதொரு நிலையில் தான் இச்சட்டமூலத்தை நிறைவேற்ற முயல்கின்றனர். எல்லையற்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டு சிலர் இந்த நாட்டிற்கு செய்துள்ள அநியாயங்களை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். காஞ்சன விஜேசேகர அமைச்சர் நல்ல படித்த சிறந்த நபர், ஆனால் எதிர்காலத்தில் ஊழலின் உச்சத்தில் உள்ள நாட்டை மோசமான நிலைக்கு தள்ளக்கூடிய ஒருவர் இந்த அமைச்சு பொறுப்பை ஏற்றால் நாட்டின் மின்சார பாவனையாளர்களின் நிலை என்னாகும்?


கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ச ஓர் இரவில் எடுத்த இயற்கை உரத்திற்கு மாறும் தீர்மானத்தினால் நாட்டிற்கு ஏற்பட்ட நிலையை நாம் கண்டுள்ளோம். இந்த நாட்டில் சிலர் தமக்குள்ள அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்தி தவறான தீர்மானங்களை முன்னெடுப்பதால் அதன் பிரதிபலன்களை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டும். பசில் ராஜபக்ச நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஒரு கூட்டணி இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மோசமடைய செய்ததை நாம் பார்த்தோம். அதேபோன்று மின்சக்தி அமைச்சருக்கு வழங்கப்படும் இந்த எல்லையற்ற அதிகாரங்களின் ஊடாக இ.மி.ச. இல்லாதொழியும் நிலைக்கு தள்ளப்படலாம். இவ்வளவு காலம் அரச சேவை நிறுவனமாக விளங்கிய இ.மி.ச., எதிர்காலத்தில் அமைச்சரின் தனிப்பட்ட வியாபாராமாக மாறும் நிலைக்கு தள்ளப்படலாம். நான் இதன் மூலம் சுட்டிக்காட்டுவது காஞ்சன விஜேசேக அமைச்சரை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொள்கிறேன். எதிர்காலத்தில் மின்சக்தி அமைச்சுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் அமைச்சருக்கு இதனை ஒரு தனிப்பட்ட வியாபாரமாக முன்னெடுத்து செல்லலாம்.
இலங்கை மின்சார சபையுடன் போட்டியிடுவதற்கு வேறு நிறுவனங்கள் காணப்பட்டிருக்குமாயின், இ.மி.ச.-இன் ஊழல்களினாலேயே எமது கட்டணங்கள் அதிகரிக்கின்றன. எனவே நாம் வேறு நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்வோம் என மக்கள் கூறியிருப்பர். ஆனால், அவ்வாறு கூறக்கூடிய நிலை நமது நாட்டில் இல்லை. இதற்கு முன்னதாக நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் நுகர்வோர் அமைச்சர் பேசியிருந்தார். அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர பதிலளித்திருந்தார். அதில் 30 மில்லியன் சிவப்பு மின் பட்டியல் (ரெட் நோட்டிஸ்) அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நிலையில் அனைவருக்கும் சிவப்பு மின் பட்டியலே வரும். அதற்கு முன்னதாக எவருக்கும் கட்டணம் செலுத்த முடியாது. நுகர்வோர் பாதுகாப்பு குறித்து பேசும் நுகர்வோர் அமைச்சர் இந்த காஞ்சன விஜேசேகரவின் பேச்சை பார்க்கவில்லையோ தெரியவில்லை. அதில் 13 இலட்சம் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு இலட்சத்து 26 ஆயிரம் கணக்குகள் முழமையாக மூடப்பட்டுள்ளன. அதாவது நாட்டில் மின்சார இணைப்பை பெற்றிருந்த ஒரு இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் இனிமேல் எமக்கு கட்டணம் செலுத்தவும் முடியாது, எமக்கு மின்சாரமும் வேண்டாம் என்று, இன்று வீடுகளில் சிறிய விளக்கொன்றை ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தற்போதுள்ள நிலையில் கட்டணம் செலுத்த முடியாது. இது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பும் போது, மின் கட்டணத்தை குறைப்பதே இதன் நோக்கம் என்று நுகர்வோர் அமைச்சர் கூறினார். டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை குறைத்திருக்கலாம். கிடைத்த மழைவீழ்ச்சிக்கு ஏற்ப டிசம்பர் மாதம் மின் கட்டணத்தை குறைத்திருக்கலாம். ஆனால் குறைக்கவில்லை. கிடைத்த மழைவீழ்ச்சிக்கு ஏற்ப செப்டம்பர் மாதம் மேற்கொண்ட மின் கட்டண அதிகரிப்பை மேற்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதாவது இந்த நாட்டில் நுகர்வோர் இல்லாமல் போயுள்ளனர். ஜனவரி மாதம் 74 ஆயிரத்து 516 மின் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி மாதம் 1 இலட்சத்து 10 ஆயிரத்து 639, மார்ச் மாதம் 96 ஆயிரத்து 263, ஏப்ரல் மாதம் 65ஆயிரத்து 504 மின் விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் போனஸ் கிடைத்தமையால் அரச ஊழியர்கள் கட்டணத்தை செலுத்தியிருக்கக்கூடும். மே மாதம் புத்தாண்டின் பின்னர் பணம் இல்லை, 1 இலட்சத்து 32 ஆயிரத்து 300 விநியோகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.


எனவே ஒரு சேவை வழங்கும் நிறுவனமான இலங்கை மின்சார சபையை ஒரு தனி நபரின் வியாபாராமாக மாற்றும் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.

No comments: