News Just In

5/08/2024 03:16:00 PM

கல்முனை - மருதமுனை கடலரிப்பை கட்டுப்படுத்த ஹரீஸ் எம்.பி ஜனாதிபதி செயலாளர் ஊடாக நடவடிக்கை : துரிதமாக பணியை முன்னெடுக்க கரையோர வளங்கள் திணைக்களம் நடவடிக்கை !


நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசங்களில் கடலரிப்பு தொடர்ந்தும் இருந்துவந்த நிலையில் இப்போது கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களிலும் கடலரிப்பு உக்கிரமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தி உடனடியாக தடுப்பணை அமைக்கவேண்டிய அவசியம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஜனாதிபதி செயலாளர் சமன் எக்கநாயக்கவை சந்தித்து விளக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் தொடர்பில் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலாளர் சமன் எக்கநாயக்கவை நேற்று (07) சந்தித்து கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் கடலரிப்பினால் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், மீனவர்களின் பொருளாதார நஷ்டம், கடலோர பிரதேசங்களின் எதிர்கால ஆபத்து நிலைகளை விளக்கி கடலரிப்பினால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான நஷ்டங்களை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவருக்கு விளக்கி மிக அவசரமாக கடலரிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், தடுப்பு அணைகளை அவசரமாக நிர்மாணிக்க தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி செயலாளர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை தொடர்புகொண்டு குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து எழுத்து மூல பணிப்பையும் விடுத்துள்ளார். கடலரிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

No comments: