News Just In

5/16/2024 05:59:00 AM

தேசிய தலைவருக்கான ஒருங்கிணைந்த வீரவணக்க நிகழ்வு!




தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில், ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக அளப்பரிய தியாகங்களைப் புரிந்து முப்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தங்கள் உயிர்களை தமிழீழ விடுதலைக்கு அர்ப்பணித்துள்ளார்கள்.

மேலும் இலட்சக்கணக்கான அப்பாவித்தமிழ் பொதுமக்களும் இந்த தேசவிடுதலைப்போராட்டத்தில் சிங்கள பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழீழ சுதந்திர விடுதலைப்போராட்டம் உலக வல்லாதிக்க அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் , எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி வரித்துக்கொண்ட இலட்சியம் மாறாது , உறுதியோடு வழிநடாத்தி இறுதிவரை அடிபணியாது தமிழீழ விடுதலைக்காக தமிழீழ மண்ணிலே, மாவீரர்கள் வழியில் தன்னுயிரையும் அர்ப்பணித்து விட்டார் என்பதில் தமிழீழ தேசியத்தலைவரையும் மாவீர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றுதலையும் மனவுறுதியையும் அவரை மிக ஆழமாக நேசித்து அறிந்து கொண்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பது திண்ணம்.
முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும்

முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும் எங்கள் தேசியத்தலைவர் தன்னை தமிழீழ மண்ணின் விடுதலைக்கு விதையாக்கி இற்றைக்கு பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே எமது விடுதலை இயக்கத்தின் மரபிற்கு அமைவாக எங்கள் தேசியத்தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் , தமிழீழ மண்ணையும் தேசியத்தலைவரையும் நேசித்த தமிழ்மக்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் எமது விடுதலைப்போராட்டத்தின் நீட்சியாக தமிழ்த்தேசிய எழுச்சியுடன் அவரது உரித்துடையோர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புக்கள், தமிழீழ மண்ணையும் எம்தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்த பொதுமக்கள், மற்றும் தமிழீழத்தேசியத்தலைவரின் தலைமையின் கீழ் போராடிய போராளிகள் அனைவரையும் இணைத்து நடாத்த வேண்டும் என்ற தொடக்கநிலை கருத்துருவாக்கத்தை எட்டியுள்ளோம்.

எனவே இந்த முடிவை உலகமெங்கும் பரந்துவாழும் எம்தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் உரிமையோடு அறியத்தருகிறோம்.

இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தேசியப் புனிதப் பணியில் அனைவரையும் இணைத்துக்கொண்டு எம்மோடு தோளோடு தோள் நின்று செயற்படுவீர்கள் என்ற மிகப்பெரும் நம்பிக்கையுடனும் உரிமையோடும் கேட்டு நிற்கிறோம்.

இந்த புனித வரலாற்றுக் கடமையை முன்னெடுக்க “காலக்கடமை ”எனும் பணிக்குழுவை உருவாக்கி அதனூடகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் போராளிகள் வெளியிட்ட ஊட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: