News Just In

12/17/2023 03:34:00 PM

இலங்கையை அண்மிக்கும் காற்றுச் சுழற்சி : வடக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறு?




வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் தெற்காகப் பயணித்து மன்னார் வளைகுடாவின் தெற்காக, அதன்பின்னர் குமரி கடல் பிராந்தியத்தின் தெற்காக சென்று அரபிக் கடல் பிராந்தியத்திற்குள் நுழையும்.

இதன் காரணத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் அதிகளவு மழை பெய்யும்.

இதேபோன்று தற்போது தென் சீன கடல் பிராந்தியத்தில் இருந்து வந்து கொண்டிருக்கின்ற இன்னுமொரு காற்று சுழற்சி காரணமாக இது தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தின் ஊடாக நகர்ந்து எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையாக வருவதன் காரணத்தினால் இந்த நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்லாது அதனை அடுத்தவரும் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப் பகுதிகளில் கூட மீண்டும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கைக்கு அண்மையாக வர வாய்ப்புள்ளது.

இதே போன்று அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இன்னும் ஒரு காற்று சுழற்சி உருவாக சாத்தியம் உள்ளது.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட காலப் பகுதிகளில் இலங்கைக்கு அதிகளவான மழை பெய்யும் சாத்தியமுள்ளது.இதில் பெரும்பாலும் அதிக மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள் கூட காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் எனக் குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: