News Just In

12/14/2023 09:14:00 AM

100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தை நோக்கி தலதா மாளிகையில் இருந்து நல்லூர் நோக்கி பயணம்.!


.- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்துச் செல்லும் பயணம்.

சர்வமத தலைவர்களின் உயர்ந்தபட்ச ஆதரவுடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட 100 இளைஞர்கள் அமைப்புக்கள் கண்டி தலதா மாளிகை தொடக்கம் நல்லூர் கந்தசாமி கோவில் வரை உள்ள அனைத்து சர்வமத தலைவர்களுக்கும் சமாதானத்தின் செய்தி மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை(04.12.2023) கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி ஸ்ரீ நாட்ட தேவாலத்திற்கருகாமையில் ஆரம்பமானது.

சயோமோபாலிக மகா நிகாய அஸ்கிரிய மகா விகாரை பிரிவினரின் ராஜ பூஜித விங்சத் வர்கிக காரக சங்க சபிக கலாநிதி வணக்கத்திற்குறிய கெட்டகும்பரே தம்மாராம தேரரின் பங்குபற்றலுடன் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பின்னர் கண்டி கணதேவி கோவிலின் நம்பிக்கையாளர் சபை மாவில்மட இந்து கோவிலின் குருக்கள் ஆகியோருக்கு இம்முன்மொழிவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அடுத்து மாவில்மட ஜும்மா பள்ளிவாசல் மௌலவி உட்பட நம்பிக்கையாளர் சபையை சந்திக்க சென்ற இவ்விளைஞர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.

சமாதானத்தின் செய்தியை பாதுகாக்க தாம் செயற்படுவதாக உறுதியளித்த அவர்கள் இளைஞர்களின் இம்முயற்சி காலத்தின் தேவையாக அமைவதாக தெரிவித்தார். சர்வ மதத் தலைவர்கள் இதன்போது தெரிவித்தனர்
உடரட்ட அமரபுர நிகாய மல்வத்து பிரிவின் அனுநாயக்க அலவத்துகொட கொனகலகல ஸ்ரீ சத்தானந்த மகா பிரிவேனா பரிவனாதிபதி வணக்கத்திற்குரிய கொனகலகல உதித தேரர் அனைத்து மதங்களையும் சேர்ந்த இளைஞர்கள் சமாதானத்தின் செய்தியை முன்னெடுக்க எடுக்கும் செயற்பாட்டை பாராட்டியதுடன் அடுத்த வருடம் தேர்தல்கள் நடைபெறும் வருடமாக அமைவதால் அரசியல் இலாபங்களுக்கு இனவாதத்தை பயன்படுத்தும் செயற்பாடுகளுக்கு இளைஞர்களிடம் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என இதன்போது கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் மாத்தளை கொன்கஹவெல ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் மௌலவியை சந்தித்த இக்குழு மாத்தளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அலுவிகாரை விகாரையின் விகாராதிபதியை சந்தித்ததுடன் அதனை தொடர்ந்து சீயம் நிகாய ரங்கிரி தம்புளு பிரிவின் மகாநாயக்க தேரர் இனாமலுவே சிறீ சுமங்கல தேரரை சந்தித்தனர்.

அதனை தொடர்ந்து மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலஹாஹெங்குனவெவ தம்மரத்ன தேரரை சந்தித்த இவர்களின் இச் செயற்பாட்டை தேரர் நீண்ட அறிவுரைகளை வழங்கியதுடன் இவ்வாக்கபூர்வமான செயற்பாட்டுக்கு தனது ஆசீர்வாதம் மற்றும் ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அனுராதபுரம் அட்டமஸ்தான ருவன்வெலிசாயவின் விகாராதிபதி வணக்கத்திற்குறிய ஈத்தல்வெட்டுன வெவ ஞானதிலக்க தேரர் அவர்களை சந்தித்து முன்மொழிவை வழங்கியதுடன் அதனை மேலும் விருத்தி செய்ய தேவையான முக்கியமான ஆலோசனைகளை இதன்போது வழங்கினார்.

இன முரண்பாடுகள் மற்றும் மத பிரச்சினைகள் காரணமாக துயரம் மற்றும் அநீதிக்கு உட்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டல், அரசியல் கலாசாரத்தின் ஊடாக இனவாதம் மதவாதத்தை ஒழித்தல், வர்த்தக நோக்கத்திற்காக இனவாதம் மற்றும் மதவாத பிரச்சினைகளை ஏற்படுத்தலை தடுத்தல் மற்றும் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப பொது தளமொன்றை கட்டியெழுப்பல் போன்றன இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் சர்வமத தலைவர்கள் அவர்களது பூரண ஒத்துழைப்பினை நாட்டில் எதிர்காலத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப உதவுவதாக இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் தற்போது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தம் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.


No comments: