
நூருல் ஹுதா உமர்
உணவு உற்பத்தியினையும் உணவு பாதுகாப்பினையும் மேம்படுத்தி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும் போசாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில் சுகாதார விவசாய மற்றும் கால்நடை வைத்தியத்துறையினருக்கிடையிலான கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (29) இடம்பெற்றது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தாய், சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் குறித்த செயலமர்வினை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், கால்நடை உற்பத்தி வைத்திய அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
போசாக்கான உணவு உற்பத்திகளை அதிகரிக்க கால்நடை துறை மூலம் முட்டை, இறைச்சி மற்றும் பால் உற்பத்தியினை மேற்கொள்ளல், விவசாயத் துறையின் ஊடாக வீட்டுத்தோட்டங்களை அமைத்து ஆரோக்கிய மற்றும் போசாக்கு உணவு உற்பத்தியை மேற்கொள்ளல் என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், தாய், சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், அம்பாரை மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.டி.எம்.மாஹிர், வீட்டுத்தோட்டம் தொடர்பான விடய அதிகாரி என்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை பிராந்தியத்தில் வீட்டுத் தோட்டத்தின் அவசியம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டுதல், பசுப்பால் பாவனையை ஊக்கிவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்தல், மற்றும் கல்முனை பிராந்தியத்தில் போசாக்கினை மேம்படுத்தல் தொடர்பாகவும் இந்நிகழ்வின் போது பல்வேறு விடயங்கள் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments: