News Just In

11/01/2023 10:14:00 AM

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டம்?

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், “தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்” என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். சுமனரத்தின தேரர், அவர் தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, பகிரங்கமாக இனவாத, வன்முறை கருத்துகளை கூறி, மட்டு மாநகரசபை ஆணையாளர் மீது குற்றம் சாட்டி உள்ளார்.ஆகவே அடுத்து நடைபெற உள்ள உங்களது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு, அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு அதிகாரபூர்வமாக, அழைப்பு விடுத்து, அவரது தரப்பையும் கேட்டு, அதில் ஏதும் உண்மை உள்ளதா, இல்லையா என்ற விபரங்களை முழு நாட்டுக்கும் தெரியப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தவிசாளர், ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் நேரடியாக தாம் இன்று உரையாடியதாக கூறியுள்ள மனோ கணேசன் எம்பி இதுபற்றி மேலும் கூறியதாவது,

ஐசிசிபிஆர் என்ற சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் 3 (1) உறுப்புரையில், எந்தவொரு நபராலும் யுத்தத்தைத் தூண்டவோ, வேறுபடுத்தும் விதத்தில் எதிர்வாதம் புரியவோ, அல்லது வன்முறைகளில் ஈடுபடுவதோ, ஒன்று திரளுவதோ, இன, மத குரோதங்களை முன்னெடுப்பதோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு சிறைவாசங்களுக்கும், வழக்குகளுக்கும் முகம் கொடுக்கின்றனர்.

ஆனால், பல்லாண்டுகளாக மேலாக பொது வெளியில் இனவாத கருத்துகளை கூறியும், வன்முறைளில் ஈடுபட்டும் வரும் அம்பிட்டிய சுமனரத்தின தேரர் மீது இச்சட்டம் இன்னமும் பாயவில்லை. இச்சட்டத்திலிருந்து இவருக்கு இனிமேல் விலக்கு வழங்க முடியாது. இனி இது முடிவுக்கு வர வேண்டும். இவரது பாரதூரமான இனவாத கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் மூலம் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முதல்நாள் என்னிடம் உரையாடி உள்ளார். அதேபோல், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. சிறிகாந்தாவுடன் நான் உரையாடினேன். தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக, தேரர் பகிரங்கமாக கூறியுள்ளமை தொடர்பாக உண்மையை கண்டறியுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுவே முறைப்படி செய்யப்பட வேண்டிய காரியம் என நினைக்கிறேன்.

தனது இனவாத கருத்துகள் தொடர்பில் தேரர் மீது ஐசிசிபிஆர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வேறு விஷயம். அது சட்டம், ஒழுங்கு அமைச்சரின் பொறுப்பாகும்.

தேரரது தாயின் கல்லறை உடைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தொடர்பில் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தமிழர்களை குறிப்பாக தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், என தேரர் கூற முடியாது. இதை இனிமேல் எம்மால் அனுமதிக்க முடியாது. தான் ஏதும் பிரச்சினையை எதிர்கொண்டால், அதற்கு தீர்வை தேட, முறைப்படியான மாற்று வழி இருப்பது தேரருக்கு விளங்க வேண்டும்

No comments: