News Just In

11/28/2023 09:10:00 AM

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் பொலிஸாரால் கைது . பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் போலீசார் வாக்குவாதம்.!



மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் நேற்று மாலை (27) பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்விற்காக ஈகைச் சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் உறவுகள் காத்திருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றது.

திடீரென உள் நுழைந்த பொலிசார் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகளை அகற்றினர்.

இதனை கண்டித்து அங்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈகை சுடரேற்றுவதற்கு 5 நிமிடமாவது தாருங்கள் என கெஞ்சிக்கேட்டும் நேரம் வழங்காமல் திடீர் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

வழமை போன்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவு கூறும் முகமாகவும் ஈகைச் சுடரேற்றி நினைவேந்தலை மேற்கொள்ளும் முகமாக குறித்த நேரமான மாலை 6.05 நிமிடம் வரை காத்திருந்தனர்.

இதன்போது கலகம் அடக்கும் பொலிசாருடன் உள் நுழைந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் நினைவேந்தல் நடாத்துவதற்கு தடை ஏற்படுத்தியதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட சிகப்பு,மஞ்சள் நிற கொடிகளை அகற்றினார்கள்.

அத்துடன்துடன் ஒலி பெருக்கி சாதனங்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.குறித்த பொலிசாரின் செயற்பாடு இடம்பெறும் போது மாவீரர்களின் உறவுகள் ஈகைச் சுடரை அச்சத்துடன் விரைவாக ஏற்றிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இச் சம்பவமானது பிரதேசத்தில் அசாதாரன சூழ் நிலையை ஏற்படுத்தியதுடன் மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிகழ்வு நடைபெற்ற பிரதேசத்தில் அதிகளவு பொலிசார், இராணுவத்தினர் மற்றும் இராணுவ கவச வாகனங்கள் என்பன கைதிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்பன முன்னெச்சரிக்கையாக தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

No comments: