News Just In

11/28/2023 09:24:00 AM

வைத்தியசாலை, பாடசாலைகளுக்கு வந்த அடையாளம் காணப்படா இரசாயனம்!



மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளில் சோதனை நோக்கங்களுக்காக காலாவதியான இரசாயனங்களை மோசடியான முறையில் விற்பனை செய்யும் மோசடி தொடர்பான தகவல்களை அத தெரண 'உகுஸ்ஸா' அண்மையில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது.

நீதிமன்ற உத்தரவுப்படி, குறித்த இரசாயனங்களை சோதனையிட்டபோது, ​​அவற்றில் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பது தெரியவந்தது.

இதன்போது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், மோசடியின் பிரதான சந்தேகநபருக்கு 45,000 ரூபா அபராதம் விதித்ததுடன், இரசாயனப் பொருட்களை அழிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த இரசாயனங்கள் நேரடியாக வெளியிடப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், விசேட நீதிமன்ற அனுமதியின் கீழ் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் குறித்த இரசாயன இருப்புக்கள் பரிசோதிக்கப்பட்டன.

இரசாயனங்களின் தரத்தை சரிபார்க்கும் அதிகாரம் கொண்ட இலங்கையில் உள்ள ஒரே நிறுவனமான Insee evicted environmental society நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதற்காக இரசாயன மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 380 இரசாயனங்கள் சோதனை செய்யப்பட்டதில் சில போத்தல்களில் லேபிள்களோ, இரசாயனத்தின் பெயரோ இல்லை என்பது தெரியவந்தது.

இரசாயனங்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மோசடியாளரிடம் கேட்டபோது, ​​அவை வாசனையால் அடையாளம் காணப்படுவதாகக் கூறினார்.

மேலதிக பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு, இரசாயனங்கள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாதிரிகள் ஆய்வகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பரிசோதனைகளின் பின்னர், கையிருப்பு இரசாயனங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No comments: