News Just In

11/08/2023 03:30:00 PM

நாடாளாவிய ரீதியில் அனைத்து தபாலகங்களும் இயங்கும் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து -தபால் மா அதிபர்.

எந்தவொரு தபாலகமும் இயங்காது- தொழிற் சங்கங்கள்.!


 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அஞ்சல் தொலைத் தொடர்பு தொழிற் சங்கங்கள் நாடளாவிய ரீதியில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

ஆயினும், இந்த அறிவித்தல் திங்கள் மாலை வெளியானதும் நாடாளாவிய ரீதியில் அனைத்து தபாலகங்களும் வழமைபோன்று இயங்கும், ஊழியர்களின் விடுமுறைகள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தபால் மா அதிபர் அறிவித்திருந்தார்.

ஆயினும், அஞ்சல் தொலைத் தொடர்பு தொழிற் சங்கங்கள் அனைத்து தபாலகங்களின் முன்னாலும் நொவெம்பெர் 08ஆம் 09ஆம் திகதிகளில் அஞ்சலகங்கள் இயங்காது என அறிவித்திருந்தபடியே மட்டக்களப்பு மாவட்டத்திலும் புதனன்று (08) தபாலகங்கள் இயங்கவில்லை.

ஒவ்வொரு அஞ்சலகங்கள் முன்னாலும் பூட்டப்பட்ட வாயிற் கதவடியில் “தொழிற் சங்க நடவடிக்கை காரணமாக 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்களிலும் அஞ்சல் அலுவலகம் இயங்காது புட்டப்பட்டிருக்கும்” என எழுதப்பட்ட அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் திங்கள் நள்ளிரவு (07) முதல் தபால் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வரும் நிலையில் செவ்வாயன்று (08) தபால் நிலைய ஊழியர்களும் ஆதரவு வழங்கும் வகையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நுவரெலியாவிற்கும் முழு இலங்கைக்கும் தபால் சேவையின் அடையாளச் சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாகத் திகழும் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தபால் நிலையம் ஆங்கிலேயர்களின் பாரம்பரி தொழினுட்ப திறமைகளைக் கொண்டு சிவப்பு செங்கல்லினால் நிருமாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இங்கிலாந்தின் SAINSBURY WACTHAMSTO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட அழகிய கடிகாரம், பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக் கொண்டே இவ்வழகிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டிட நிருமாணத்திற்கு பெரும்பாலும் தேக்கு மரங்களே உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் புராதன வரலாற்றைப் பிரதிபலிக்கும் விலைமதிப்பற்ற வளமாக நுவரெலியா தபால் நிலையக் கட்டிடம் கருதப்படுகின்றது.

இந்தக் கட்டிடத் தொகுதியை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்தே அஞ்சல் தொழில் சங்கத்தினர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

No comments: