News Just In

10/11/2023 05:15:00 PM

புதுநகர் பொது நூலகத்தில் கைப்பணிப் பொருட் கண்காட்சியானது அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

புதுநகர் பொது நூலகத்தில் கைப்பணிப் பொருட் கண்காட்சியானது அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.



Jana Ezhil

தேசிய வாசிப்பு மாதமாகிய ஒக்டோபர் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் புதுநகர் பொது நூலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கழிவுப் பொருட்களினாலான கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியானது இன்று (11.10.2023) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.


2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருவதுடன், அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு தொனிப் பொருளுடன் இவ் வாசிப்பு மாத நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் "உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது " எனும் தொனிப்பொருளில் இவ் ஆண்டுக்கான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் புதுநகர் பொது நூலகத்தின்ஒழுங்கமைப்பில் கழிவுப் பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சியானது மாணவர்களினதும், பொது மக்களினதும் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

அத்துடன் இந்நிகழ்வில்ன் புனர்நிர்மானம் செய்யப்பட்ட சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் திருவுருவச் சிலையும் அதிதிகளால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

புதுநகர் பொது நூலகத்தின் நூலக உதவியாளர் செல்வி எஸ்.கீதாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கிரிஜா பிரேம்குமார், புதூர் விக்ணேஷ்வரா வித்தியாலய அதிபர் ஐ.இலங்கேஸ்வரன், வலையிறவு மெதடிஸ்த மிஷன் பாடசாலையின் அதிபர் திருமதி வி.கிருஷ்ணகுமார், வீச்சுக்கல்முனை அன்னம்மாள் வித்தியாலய அதிபர் எஸ். பிரான்சிஸ், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்களுடன் புதூர் நூலகத்தின் வாசகர் வட்டத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந் நிகழ்வின் சிறப்பம்சமாக புதுநகர் நூலகத்தின் வளர்ச்சியில் பங்களிப்புகளை செய்த வாசகர்கள் மற்றும் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது அதீத திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் என பலரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments: