
அபு அலா -
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை திடீர் பரிசோதனை செய்யும் நடவடிக்கை நேற்று (22) மேற்கொள்ளப்பட்டது.
இந்த திடீர் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களும், சுத்தம் செய்யப்படாமல் உணவு வகைகளை சமைக்கத் தயாராக இருந்த பொருட்கள், முறையற்ற விதத்தில் பாவிக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் ஒரு தடவை உபயோகித்த பின்னர் மீள்பாவனைக்காக வைக்கப்பட்ட எண்ணெய்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் விற்பனை செய்யும் நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பேணப்படாமை, பாவனைக்குதவாத உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொதுமக்களினால் கிடைக்கபெற்ற முறைப்பாட்டையடுத்து இந்த திடீர் பரிசோதனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார்.
ஹோட்டல்களின் தரத்தைப்பேணும் வகையிலும், சுகாதார முறையில் சுத்தமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு உணவகங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதைக் கண்டால் மக்கள் விழிப்புடன் இருந்து 067 - 2250834 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கையில், பொது சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: