News Just In

6/07/2023 01:22:00 PM

கஜேந்திரகுமார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்றத்திற்கு அனுமதி: சபாநாயகர்




நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (07.06.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் எனவும் பொலிஸார் என்னிடம் தெரிவித்தனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியமைக்கு பதிலளிக்கும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.




தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் ரீதியிலான செயல்படுகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது வேறு விடயம்.

ஆனால், அவர் நாடாளுமன்றம் வருவதற்கு முன்னர் கைது செய்தமை நியாயமான செயல் இல்லை. நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் தெளிவான ஆணையொன்றை வழங்கியுள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்த பின்னர் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், “பொலிஸார் தமது கடமையைச் செய்வதிலிருந்து எம்மால் தடுக்க முடியாது” எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

No comments: