
-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சூழலை மாசடையச் செய்தால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் உயிர்வாழ முடியாது போய்விடும் என சேருவில பிரதேச செயலக நிருவாக அதிகாரி ரேணுகா தமயந்தி தெரிவித்தார்.
உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் முகமாக சேருவில பிரதேச செயலகப் பிரிவின் சேருநுவர நகரில் இடம்பெற்ற சுற்றுப் புறச் சூழலைத் தூய்மையாகப் பராமரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வை ஆரம்பித்து வைத்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
வீஎபெக்ற் (We Effect) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் சேருவில பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நிகழ்வுகள் வியாழனன்று 08.06.2023 இடம்பெற்றன.
நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து சேருவில பிரதேச செயலக நிருவாக அதிகாரி ரேணுகா தமயந்தி, சூழலுக்கு பெருத்த கேடு விளைவிக்கும் பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகள் பலவேறு சூழல் மாசுபாட்டக்குக் காரணமாய் இருப்பதோடு டெங்கு நோய் உற்பத்தியாவதற்கும் ஏதுவாய் அமைந்திருக்கின்றன. எனவே, பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையை நாம் படிப்படியாகக் குறைக்கவும் காலப்போக்கில் அவற்றை முற்றாகவே நிறுத்தவும் ஆயத்தமாக வேண்டும். இந்தப் பூமியைப் பாதுகாக்க முடியும்” என்றார்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வேலாயுதம் மோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேருவில பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சிவில் பாதுகாப்புப் பிரிவு, சுற்றுச்சூழல் பிரிவு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். சிரமதானத்தின் மூலம் சேருவில நகர தெருவோரங்களில் அசிரத்தையாக வீசப்பட்டுக் கிடந்த பொலித்தீன்களும் பிளாஸ்ரிக் கழிவுகளும் அகற்றப்பட்டு நகரத் தெருமருங்குகள் துப்புரவு செய்யப்பட்டன.
No comments: