News Just In

6/14/2023 07:46:00 AM

கொழும்பில் மயானத்தில் வீசப்படும் மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட சடலங்கள்!

மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட சடலங்களின் பாகங்கள் பயிற்சியின் பின்னர் லொறி மூலம் மஹரகம பரோடா தோட்டத்திலுள்ள ஜோரனிஸ் பீரிஸ் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பின்றி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குழி தோண்டாமல், மேல் மட்டத்தில் உடல்களை குழியில் இடுவதனால் ஆபத்து இரு மடங்காகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நேற்றுமுன் தினம் (13.06.2023) ஆம் திகதி மாலை, லொறி மூலம் மஹரகம, பரோடா தோட்டத்திலுள்ள ஜோரனிஸ் பீரிஸ் மயானத்திற்கு சடலங்கள் கொண்டுவரப்பட்டு, எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளுமின்றி, சடலங்கள் ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்தில் மண்ணால் மூடி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறித்த சடலங்களுக்கு பாதுகாப்பான முறைகள் எதுவும் பின்பற்றப்படாததால் இறந்த உடல்களில் எலும்புகள், காதுகள், நாக்குகள் போன்றவை காணவில்லை எனவும், இந்த பாகங்களை நாய்கள் மற்றும் காகங்கள் எடுத்துச்சென்று அருகில் உள்ள குடிநீர் கிணறுகளில் போடுவதாலும், சுற்றுச்சூழலில் கொட்டுவதாலும் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மஹரகம நகரசபையின் சுகாதார திணைக்கள உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​மருத்துவ மாணவர்களின் பரிசோதனையின் பின்னர் இந்த மயானத்தில் அகற்றப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவை முறையாக புதைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: