News Just In

5/17/2023 12:55:00 PM

சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி வேட்பாளர் - ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம்!



2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்த்து போட்டியிட்டு 41.99 சதவீத வாக்குகளை பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி 23.90 சதவீத வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களை கைப்பற்றினார்.இந்த பெறுபேற்றை தொடர்ந்து சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பெரும்பாலான தரப்பினர் விலகி ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியை பிரநிதித்துவப்படுத்தினர். இந்த அரசியல் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமை தாங்குகிறார்.

இவ்வாறான பின்னணியில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்து அதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கைகளை எடுக்குமாயின் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments: