
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதற்கமைய, குறித்த தரப்பினர் தங்களது யோசனைகளை, justicemedia07@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை ஆராய்ந்து, புதிய சட்டமூலம் உருவாக்கப்படும் எனவும், அது தொடர்பில் உரியத் தரப்பினருடன் கலந்துரையாடப்படும் எனவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு இலங்கையின் தேசிய கத்தோலிக்கப் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படும் என்றும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களை மீறாத புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இலங்கை மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதியளித்தன.
எனினும், முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது.
எனவே, இந்த விடயத்தில் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறல் அவசியமாகும் எனத் தேசிய கத்தோலிக்க சபை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: