News Just In

3/13/2023 07:58:00 AM

தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை!

2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது தொடர்பான கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளமையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சரின் அனுமதியின்றி நிதி விடுவிப்பு தொடர்பான நேரடித் தீர்மானங்கள் எதனையும் எடுக்க முடியாது என நிதி அமைச்சின் செயலாளரினால் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணியை அரச அச்சகத் திணைக்களம் ஆரம்பிக்க முடியாத நிலையில் தங்களுக்குத் தேவையான நிதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போதைய சூழ்நிலை காரணமாக மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் அஞ்சல் மூல வாக்குச் சீட்டுகளை உரிய அஞ்சல் நிலையங்களில் ஒப்படைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: