News Just In

11/17/2022 12:51:00 PM

இலங்கையின் வாழைப்பழ ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது!




சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் மாதாந்தம் 2,000 மெற்றிக் டொன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி எச்.எம்.சுபஹிங்கெந்த தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 150 வாழை செய்கை விவசாயிகளின் விபரங்களை சீன அரசாங்கத்திடம் வழங்கி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்திற்கு 500 மெற்றிக் டன் வாழைப்பழங்கள் வீதம், மாதத்திற்கு 2,000 மெற்றிக் டொன் வாழைப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், விவசாய அமைச்சு அதில் உரிய அவதானம் செலுத்தாமை காரணமாக வாழை ஏற்றுமதி உடன்படிக்கை இரத்தாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது.

இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் புளி வாழை (கதலி) தற்போது சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பழமாக மாறியுள்ளது.

ராஜாங்கனை பகுதியில் பயிரிடப்பட்ட வாழைத்தோட்டத்தில் பெறப்பட்ட அறுவடை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் 12,500 கிலோ புளி வாழைப்பழத்தை டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் கவனிப்பாரற்ற கிடந்த வாழைப்பழங்கள் இன்று நாட்டுக்கு டொலரை ஈட்டிக் கொடுக்கும் பழமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: