News Just In

11/08/2022 02:36:00 PM

நடுக்கடலில் தத்தளித்த 300 பேர்சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!




இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடொன்றுக்கு படகில் புறப்பட்ட 300 பேர், கடலில் தத்தளித்த நிலையில் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும். எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கையர்கள் பலர் இவ்வாறான ஆபத்தான பயணங்களால் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிந்திய தகவல் 

அந்த கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு தற்போது ஜப்பானிய கப்பல் மூலம் வியட்நாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு வியட்நாம் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் நேற்று (திங்கட்கிழமை) வியட்நாம் மற்றும் சிங்கப்பூருக்கு அருகிலுள்ள கடலில் விபத்துக்குள்ளானது

No comments: