News Just In

10/07/2022 07:05:00 AM

நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் : 24 குழந்தைகள் உட்பட 35 பேர் சுட்டுக்கொலை!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

குழந்தைகள் அலறின; அழுதன. ஆனால் தாக்குதல் நடத்திய நபரின், கொலை வெறி தீரவில்லை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் ஈவிரக்கமின்றி தாக்கினார்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்து வந்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இருப்பினும், இந்த பயங்கர சம்பவத்தில், 35 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. எஞ்சிய 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் ஆவார்கள்.

பொலிஸார்ர் வருவதற்குள், அந்த நபர், தாக்குதல் நடத்தி விட்டு வெள்ளை நிற 'பிக்-அப்' லாரியில் அங்கிருந்து தப்பி விட்டார்.

கொல்லப்பட்ட குழந்தைகளின் உடல்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. சம்பவம் தொடர்பில் தகவல் அந்த நகரத்தில் காட்டுத்தீபோல பரவியது. பரிதவித்துக்கொண்டு பெற்றோர்களும், உள்ளூர் மக்களும் அங்கு கூடினர்.

கொலையாளி தப்பிச்சென்ற வாகனத்தை பொலிஸார் தேடிய போது, அவரது வீட்டின் அருகே அது முற்றிலும் எரிந்து போய் இருந்ததைக் கண்டனர். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து விட்டார் எனவும் தெரிய வந்தது.

அவரது வீட்டுக்குள் சென்று பொலிஸார் பார்த்தபோது, அவர் ஏற்கனவே தனது மனைவியையும், மகளையும் கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி, 35 பேரை கொன்று குவித்ததுடன், தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது.

அவர், பன்யா காம்ரப் (வயது 34) என்பவர் ஆவார். அவர், நா வாங் பொலிஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்.

சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் சிக்கி, அதன் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

அவர் இந்த படுபாதகச்செயலை நடத்தியதின் பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments: