News Just In

9/08/2022 01:28:00 PM

கல்முனையில் எல்லைப்பிரச்சினை இருப்பதாகக் கூறுவதை ரவூப் ஹக்கீம்நிறுத்த வேண்டும் - வை எல் எஸ் ஹமீட் தெரிவிப்பு !



 
நூருல் ஹுதா உமர்

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் அண்மையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டதொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்முனை பிரதேச செயலகப்பிரச்சினை தொடர்பாக நெறியாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு “எல்லைப்பிரச்சினை தொடர்பாக பேசித்தீர்க்க வேண்டும்” என்ற பதிலை வழங்கியிருந்தார். இங்கு எழுகின்ற முதலாவது கேள்வி, இத்தனை ஆண்டுகளாக ஏன் பேசி தீர்க்கவில்லை? என்பதாகும். இக்கேள்வியை அடைக்கலநாதன் அவர்களே அங்கு எழுப்பினார். இன்னும் எத்தனை காலம் ‘பேசித்தீர்க்க வேண்டும்’ என்று கூறுவார்கள் என்பதும் புரியவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், இங்கு எழுகின்ற இரண்டாவதும் மிக முக்கியமானதும் இதுவரை கல்முனைப் பிரச்சினை தீராமலிருப்பதற்கு காரணமான கேள்வி, “கல்முனையில் எல்லைப் பிரச்சினை இருக்கின்றதா? அவ்வாறு என்ன எல்லைப் பிரச்சினை இருக்கின்றது? என்பதாகும். தெளிவான, எல்லைகள் வரையறுக்கப்பட்ட கல்முனை நகரம் உத்தியோகபூர்வமாக 1897ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியிலேயே பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. இன்று வரை எந்த எல்லை மாற்றமுமில்லாமல் அது அப்படியே தொடர்கிறது. கடந்த 125 வருடங்களுக்கு மேலாக எந்தவொரு வர்த்தமானியும் எல்லை மாற்றம் செய்து வெளிவரவில்லை.

இந்நிலையில், இந்த எல்லையைத்தான தமிழ்த்தரப்பினர் கூறுபோடக்கேட்கின்றார்கள். இது எந்த வகையில் நியாயம். ஏன் கல்முனை நகரில் சில தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காகவா? அவ்வாறாயின், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழவே முடியாதா? அப்படியாயின், வட கிழக்கு பூராகவும் தமிழர்- முஸ்லிம் கலந்து வாழும் நகரங்களை எல்லாம் இன ரீதியில் கூறுபோட தமிழ்த்தரப்பினர் தயாரா? ஏன் இந்தக்கேள்விகளை இந்த முஸ்லிம் தலைவர்களும் கல்முனையைச் சொல்லியே பாராளுமன்றம் செல்லும் உறுப்பினரும் இதுவரை எழுப்பமுடியவில்லை?

நியாயமே இல்லாத நிலையில், தமிழ்த்தரப்பினர் பாராளுமன்றில் கல்முனை விடயத்தில் குரலெழுப்புகிறார்கள். பதில் வழங்க முஸ்லிம் தரப்பில் யாருமில்லை.டளசுக்கு ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதற்கும் கல்முனைப் பிரச்சினையை நிபந்தனையாக முன்வைக்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதற்கும் கல்முனைப் பிரச்சினையை முன்வைக்கிறார்கள். தமிழர் பிரச்சினையின் இரண்டாமிடத்தில் கல்முனைப் பிரச்சினையை தமிழ்க்கட்சிகள் வைத்திருக்கிறார்கள். அந்தளவு முக்கியத்துவம். ஆனால், முஸ்லிம்களுக்காக இந்தப்பிரச்சினையைத் தெளிவாகப் பேசுவதற்குக்கூட யாருமில்லை.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சகோதரர் ரவூப் ஹக்கீம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஒழுங்கு செய்யுங்கள். கல்முனை விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கும் அவர்களது கல்முனை தொடர்பான அனைத்து வாதங்களுக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன் எனக்கூறினேன். இன்றுவரை எந்த ஏற்பாடுமில்லை. எனவே, முதலாவது ரவூப் ஹக்கீமும் கல்முனை பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்முனையில் எல்லைப் பிரச்சினை இருக்கிறது என்று கூறுவதை நிறுத்த வேண்டும். நாளை வேண்டுமானாலும் தமிழர்கள் ஏனைய தமிழ் ஊர்களை உள்ளடக்கிய பிரதேச செயலகத்தைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம்கள் தடையில்லை என்பதை பகிரங்கமாகக்கூற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கல்முனையைக் கூறுபோட முஸ்லிம்கள் ஒரு போதும் உடன்படமாட்டார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக உரத்துக்கூற வேண்டும். அதற்கு மேலே கூறப்பட்ட அடிப்படையில் நியாயங்களை முன்வைக்க வேண்டும்.

கல்முனைப் பிரச்சினை இன்னும் தீராமலிருப்பதற்கு முஸ்லிம் தலைமைகளும் கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினர்களுமே முழுக்க, முழுக்க காரணமென்பதை அவர்களும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நியாயங்களை முஸ்லிம் தலைமைகளும் பா உ க்களும் பகிரங்கமாக பேச ஆரம்பிக்கத்தயாரா? இந்தப் பிரச்சினையைய் தீர்ப்பதற்கு பாராளுமன்றிலும் அரச உயர்மட்டத்திலும் இவர்கள் இன்றிலிருந்தாவது போராடத்தயாரா? “எல்லைப்பிரச்சினை” என்ற வாசகத்தை தயவு செய்து கைவிடுங்கள். கல்முனை விடயத்தில் எந்த எல்லைப் பிரச்சினையுமில்லை. உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக கல்முனைப் பிரச்சினையை இனியும் இழுத்தடிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.


No comments: