News Just In

9/15/2022 06:00:00 AM

கத்தாரில் 4 வயது பாடசாலை சிறுமிக்கு நேர்ந்த துயர சம்பவம்!

கத்தாரில், ஆரம்ப பாடசாலையில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பாடசாலை பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா - கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், மேற்காசிய நாடான கத்தாரில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, 4 வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் உள்ளார்.

கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள, ஆரம்ப பாடசாலையில் படித்து வந்த இவர், செப்டம்பர்11 ம் திகதி காலை பேருந்தில் பாடசாலைக்குச் சென்றார். செல்லும் வழியில் பேருந்திலேயே துாங்கிவிட்டார். பாடசாலை வந்ததும் மற்ற மாணவ - மாணவியர் அவரவர் வீட்டிற்கு இறங்கி சென்று விட்டனர்.

ஆனால் மின்ஸா பேருந்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கி விட்டார். இதை கவனிக்காத பாடசாலையின் பேருந்து ஊழியர்கள், கதவுகளை அடைத்துவிட்டு சென்று விட்டனர்.

பின்னர் பள்ளி முடிந்து புறப்படும் போது, பேருந்துக்குள் மாணவி மின்ஸா மயக்க நிலையில் இருந்ததை பள்ளி பேருந்து ஊழியர்கள் கண்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்து கதவுகளை அடைத்ததால் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிறுமியின் உடலை கேரளா எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 'இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும்' என, கத்தார் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments: