News Just In

9/29/2022 11:25:00 AM

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர்




பைஷல் இஸ்மாயில் -
உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது. இதிலிருந்து நாம் பாதுகாப்பு பெறுவதாக இருந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் ஆண்டுக்கொருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருவதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

உலக இதய இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று (29) குச்சவெளி பிரதேச சபையில் இடம்பெற்ற இலவச இரத்ததான குழுவினரை சபை உத்தியோகத்தர்களுக்குள் நியமிக்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் இடம்பெறும் உயிரிழப்புககளில் 34 சதவீதமானவை இருதய பாதிப்புக்களினால் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவு, இருதய விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவன அமைப்புடன் இணைந்து வருடந்தோரும் உலக இருதய தினத்தை கொண்டாடி வருகிற அதேவேளை, இதய நோயிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்ட வரைபுகளை எமது அரசு சுகாதாரத்துறையுடன் இணைந்து அதற்கான முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றது.

வளர்ச்சியடைந்துள்ள தொழில் நுட்பத்திற்கு மத்தியில் எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் இருத நோய் மற்றும் தொற்றாநோய் போன்ற பல்வேறுபட்ட விழிப்புணர்வுகளை சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்புபட்ட நிறுவனங்களும் மேற்கொண்டுவருவதுடன் அதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவும் செய்து வருகின்றது என்றும் தவிசாளர் முபாறக் சுட்டிக்காட்டினார்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 இலட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறாகும்.

இதயத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகின்றது என்றார்.



No comments: