News Just In

7/06/2022 11:27:00 AM

இம்ரான் பிரீமியர் லீக்- 05" தொடரின் இறுதி போட்டிக்கு முதலணியாக தகுதிபெற்றது சாய்ந்தமருது விளாஸ்டர் வி.கழகம்.



நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகம் ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றும் "இம்ரான் பிரீமியர் லீக் 05ம் சீசன்" 20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்திற்கு சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம், கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி முதல் அணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

நிந்தவூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வென்று கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 140 ஓட்டங்களை 08 விக்கட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. அதிரடியாக துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் ஏ.என்.எம். ஆபாக் 32 பந்துகளை எதிர்கொண்டு 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அடுத்தபடியாக மேலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் எம்.ஜே.எம். தாஜுதீன் 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அதனடிப்படையில்141 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் ஆரம்பத்தில் விக்கட்டுக்களை இழந்து தடுமாறினாலும் மத்தியதர வரிசை வீரர்களின் நிதான மற்றும் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். கல்முனை ஜிம்கானா விளையாட்டுகழகம் சார்பில் சிறப்பாக விளையாடிய மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் நிலாம் 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய றில்வான் மூன்று விக்கட்டுக்களையும், இர்பான் மற்றும் அணித்தலைவர் எம்.ஜே.எம். தாஜுதீன் ஆகியோர் நான்கு பந்துவீச்சு ஓவர்களை வீசி தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 41 ஓட்டங்களை பெற்றதுடன் எதிரணியின் ஒரு விக்கட்டையும் வீழ்த்திய விளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் ஏ.என்.எம். ஆபாக் தெரிவு செய்யப்பட்டார்.

No comments: