உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தீர்த்தம் எடுத்தல் உட்சவம் நேற்று மாலை முல்லைத்தீவுக் தீத்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பங்கு பற்றியிருந்த நிலையில், இம்முறை அதிகளவான பக்தர்கள் புடைசூழ தீர்த்தம் எடுக்கும் வைபவம் மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 30 ஆம் திகதி பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெற்று இருந்தது.
அந்த வகையில் நேற்று மாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி பறை வாத்தியம் முழங்க அடியவர்கள் புடைசூழ பாரம்பரிய வீதிகள் வழியாகச் சென்று தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது.
நள்ளிரவு உப்பு நீரில் விளக்கேற்றும் அரிய காட்சி இடம்பெறுவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலையில் காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தீர்த்தம் எடுக்கும் நிகழ்விற்கு அதிகளவான இராணுவத்தினர், காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: