News Just In

6/02/2022 06:41:00 AM

பஞ்சம் பட்டினியைத் தவிர்க்க கிராம மக்களுக்கு வழிகாட்டல்!

“பயிர் செய்வோம் பட்டினியைத் தவிர்ப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் கிராம மக்களுக்கு வழிகாட்டல் விழிப்புணர்வு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் விவசயாப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்காக நேற்று புதன்கிழமை 01.06.2022 துவக்கி வைக்கப்பட்ட முதலாவது நிகழ்வில் கமக்காரர் அமைப்பின் வீட்டுத் தோட்ட விவசாயப் பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் அடுத்து வரும் ஒரு சில மாதங்களில் ஏற்படக் கூடும் என முன்னெச்சரிக்கை செய்யப்படும் பஞ்சம் பசி பட்டினிபற்றி மக்கள் அறிந்திருப்பதோடு அதற்கான இடராயத்த ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

உணவுப் பஞ்சம் ஏற்பட்டதின்பின் பட்டினியை எதிர்கொள்வதை விட உணவுப் பஞ்சத்தைத் தவிர்ப்பதற்கான மாற்று வழிகளை முன்கூட்டியே ஆயத்தப்படுத்தி அதனை சரியான முறையில் எதிர்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

நமது வீடுகளில் முடிந்தளவு உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அதற்கு சமாந்தரமாக முடிந்தளவு சிக்கனத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விடயத்தில் அக்கறையில்லாது இருந்தால் பஞ்சம் பசி பட்டினி என்பவற்றை எதிர்கொண்டேயாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கைவசம் பணம் இருந்தும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று அனைத்துத் தரப்பினரும் எச்சரிப்பதை பொதுமக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு வீட்டுத் தோட்ட விவசாயப் பெண்களுக்கு விளக்கமளித்தனர்.

.எச்.ஹுஸைன்

No comments: