News Just In

6/22/2022 09:31:00 AM

கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்கள்!




கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியர் மாணவர்களின் பிரச்சனை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக குறிப்பிடுகையில்..

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்தேசிய கல்வியியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு ஆசிரியர் மாணவர்களை பயிற்சிக்காக பாடசாலைகளுக்கு இணைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர்சுமார் 8000 ஆசிரிய பயிலுனர்கள் கடுமையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பது சம்பந்தமாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உடனடியாக உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் .

02. குறிப்பாக பயிற்சிக்காக பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரிய மாணவர்கள் அங்கு செல்லும் போது தங்குமிடத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது மற்றும் மிக சொற்பமான மாதாந்த கொடுப்பனவான ரூபா.5000 ஐ பெறுவதால் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நாங்கள் உங்களுக்கு விசித்திரமாக விளக்க வேண்டியதில்லை.

03. எனவே, இவ்வாறான பிரச்சனைகளை குறைப்பதற்காக, தற்போது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 19 தேசியக் கல்வியியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் 8000 ஆசிரியர் பயிலுனர்களை அவர்களது நிரந்தர வதிவிடங்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளுக்கு இணைப்பு செய்து அவர்களின் அனைத்து கற்பித்தலையும் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதிகளும் கண்காணிக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள மாணவர்களின் மேற்பார்வை செய்வது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வலய மற்றும் மாகாண வளவாளர்கள் கொண்ட ஒருங்கிணைந்த பொறிமுறையொன்று அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் படி சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் ஆசிரிய மாணவர்கள் நல்ல மனநிலையில் பயிற்சியை நிறைவு செய்ய முழுமையான பங்களிப்பை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்

04. இவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவானது இவர்கள் முகம் கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு போதுமானதாக இல்லை எனவும், இவர்களுக்கான கொடுப்பனவை குறைந்தபட்சம் 10,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்!

அதன்படி, இலங்கையில் சுமார் 3 வருடங்களாக கொரோனா தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4.3 மில்லியன் மாணவர்களின் கல்வியை மறுசீரமைக்கும் உயர் பொறுப்பைக் கொண்ட தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்று வரும் இந்த ஆசிரியர் மாணவர்கள் , இத்தருணத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது. தவிர்க்க முடியாத பொறுப்பு என்பதை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வலியுறுத்துகின்றது.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவீர்கள் என நம்புகிறோம் என்றும் கடிதத்தின் பிரதி ஒன்றினை கல்வியற் கல்லூரிக்கு பொறுப்பான ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உபதலைவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: